• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வயநாடு மக்களை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு

ByP.Kavitha Kumar

Jan 27, 2025

வயநாடு அருகே பெண்ணை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி புலி இன்று அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் புகுந்துவிடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக புலி போன்ற விலங்குகளால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள பஞ்சரக்கொல்லி பகுதியை சேர்ந்த வனக்காவலரான அச்சப்பன் மனைவி ராதா கடந்த 24-ம் தேதி காபி பறித்துக் கொண்டிருந்தார். அவரை புலி அடித்துக் கொன்றதுடன் அவரது உடலை வனப்பகுதிக்குள் 100 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது. அவரின் பாதி உடலை புலி தின்று விட்டது. பாதி உடல் மட்டுமே சம்பவ இடத்தில் கிடந்தது. இதனால் ராதாவை கொன்ற புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டமும் நடத்தினர்.

இதையடுத்து அந்த புலியைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் அந்த புலியை ஆட்கொல்லி புலி என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வனக்குழுவினர் புலியை தேடி வந்தனர். இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மானந்தவாடி பகுதியில் 48 மணிநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளை இன்றும், நாளையும் திறக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை புலியை தேடிச்சென்ற வனக்குழுவை சேர்ந்த ஜெயசூர்யா என்பவரை புலி தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் வயநாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் புலியைச் சுடும் சுடும் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. வனத்துறையை சேர்ந்த அதிரடிப்படையினர், சிறப்பு அதிரடிப்படை கமாண்டோ பிரிவினர் உள்ளிட்டோர் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் புலியைத் தேடினர்.

ஆறுகுழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது இன்று அதிகாலை 2 மணியளவில் குப்பைமேடு பகுதியில் ஆட்கொல்லி புலி இறந்து கிடந்தது. அந்த புலியின் கழுத்து பகுதியில் ஆழமான காயங்கள் இருந்துள்ளன. மற்றொரு புலியுடன் ஏற்பட்ட மோதலில் ஆட்கொலி புலி காயமடைந்து இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து புலியின் உடலை வனப்பகுதியில் இருந்து அடிவாரத்தில் உள்ள வன அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அது எப்படி இறந்தது என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்கொல்லி புலி இறந்ததால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.