• Fri. Apr 26th, 2024

இந்தியா டுடேவுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்

Byமதி

Nov 29, 2021

இந்தியா டுடே நிறுவனத்தால், ஒட்டுமொத்த செயல்திறனில் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, இந்தியா டுடே இதழுக்கும், அதன் ஆசிரியர் குழுவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜ் செங்கப்பா அவர்கள் எனக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்கள். அந்த கடிதத்தில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் செயல்பாட்டைக் கணித்ததாகவும் – அதில் ஒட்டுமொத்த செயல்திறனிலும் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து இருந்தார்.

இதைப் படித்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது தனிப்பட்ட எனக்குக் கிடைத்த பெருமை அல்ல; ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைத்த பெருமை ஆகும். இந்தியா டுடே வழங்கிய இந்த விருதை, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமாக்க விரும்புகிறேன்.

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது கொரோனா பெருந்தொற்றின் காரணமான மாபெரும் நெருக்கடி காலமாக அது இருந்தது. நிதி நெருக்கடியும், மருத்துவ நெருக்கடியும் சேர்ந்து வதைத்தது. 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிர்வாகமாகவும் இருந்தது. அத்தகைய சூழலில் அரசின் துரிதமான நடவடிக்கையாலும் – மக்களின் தியாக உணர்வாலும் கொரோனாவை வென்றோம்.

ஊரடங்கு மூலமாக வாழ்வாதாரம் இழந்த மத்தியதர வர்க்கத்தினருக்கும் உதவிகள் செய்துகொண்டே கொரோனாவுக்கும் முற்றுப்புள்ளி வைத்தோம். அப்போது, இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் என்னைப் பாராட்டி எழுதினார்கள். இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் – நம்பர் 1 முதலமைச்சர் என்றும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டார்கள். அதுதொடர்பாக என்னை ஊடகத்தினர் கேட்டபோது, நான் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழ்நாடு நம்பர் 1 ஆக வேண்டும், அதுதான் என்னுடைய விருப்பம் என்று நான் சொன்னேன். அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியா டுடே இதழானது தமிழ்நாடு நம்பர் ஒன் என்று அறிவித்துள்ளது மிகமிக மகிழ்ச்சிக்குரியதாக அமைந்துள்ளது.

நம்பர் 1 என்று சொன்னபிறகு தான் எனக்கு பயமே வருகிறது. இதனைத் தக்க வைப்பதற்காக முன்பை விடக் கூடுதலாக நான் உழைத்தாக வேண்டும் என்று நான் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

சரியான இலக்கை வைத்து – தொடர்ச்சியாக உழைத்தால், தமிழ்நாடு இழந்த பெருமையை மீண்டும் அடையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதனை நோக்கித்தான் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்; ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

சமூகம் – கல்வி – பொருளாதாரம் – தொழில் வளர்ச்சி – தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய அனைத்திலும் ஒருசேர வளர வேண்டும் என்பதுதான் எங்களது ஆட்சியின் இலக்கணம். அனைத்துத் துறையும் வளர வேண்டும் – அனைத்து சமூகமும் மேம்பாடு அடைய வேண்டும் – அனைத்து தொழில்களும் சிறக்க வேண்டும் – அனைத்து மாவட்டங்களும் செழிக்க வேண்டும் – என்பதுதான் எங்களது இலக்கு!

இத்தகைய சிந்தனையை மக்கள் மனதிலும் விதைத்துள்ளோம். முதலமைச்சரான என்னில் தொடங்கி கடைக்கோடி மனிதர் வரைக்கும் தலைசிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு உறுதி பூண்டுள்ளோம். தொழில் துறையிலும், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளிலும், சமூகக் குறியீடுகளிலும், இந்தியாவில் தலைசிறந்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விரைவில் முன்னெடுக்கப்படும். அதற்கான ஊக்க சக்தியாக இந்தியா டுடே வழங்கிய விருது அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *