• Sat. Oct 12th, 2024

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

Byகுமார்

Dec 8, 2021

மதுரையில் 175 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பகுதியினை இன்று பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

மதுரை மாநகரின் மைய பகுதியில் 1921 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது மத்திய பேருந்து நிலையம். மீனாட்சி பேருந்து நிலையம், சென்ட்ரல் பேருந்து நிலையம் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த இது 1971 முதல் பெரியார் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. பின்னர், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையத்தில் தனித்தனியாக புறநகர் பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த 2018 இறுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. அதனை தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பேருந்து நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டது.

175 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 57 பேருந்துகள் நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமும்,
450 கடைகள் இயங்கும்படி வணிக வளாகமும் கட்டப்பட்டு வருகின்றன.

பேருந்து நிலையத்தின் தரை தளத்தின் கீழே 2 அடுக்குகளில் 5000 இரு சக்கர வாகனங்களும், 350 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பயணிகள் காத்திருப்பு பகுதி, லிப்ட், நகரும் படிக்கட்டுகள், சுரங்கப்பாதை ஆகியவையும் கட்டமைக்கப்படுகின்றன.

இந்த பேருந்து நிலையத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக வளாக சுவர்கள் முழுவதும் மதுரையின் நினைவுகளையும், பெருமைகளையும் போற்றும் வகையில் ஒரு அழகியல் முன்னெடுப்பை ‘India media house’ என்ற நிறுவனத்தின் மூலமாக மதுரை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆலோசனையின் படி பெரியார் பேருந்து நிலைய கட்டிடங்களில் பிரம்மாண்ட தமிழ் எழுத்துக்களும், மாமதுரை போற்றுவோம் என்ற தலைப்பில் கண்கவர் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக நாட்டார் தெய்வங்களின் படங்கள், நாட்டுப்புற கலைகளின் படங்கள் வண்ண ஓவியங்களாக படைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, சுமார் 70 ஆண்டுகளுக்கு முந்தைய பெரியார் பேருந்து நிலைய படமும், மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளின் படங்களும், அதில் பயணம் செய்த மக்களின் படங்களும் ஒளிரும் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தந்தை பெரியாருடன் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாத்துரை, காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோர் உள்ள படங்களும்,
மதுரையின் சுற்றுலா தளங்களான திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட இடங்களும், பண்பாட்டு அடையாளங்களான சித்திரை திருவிழா மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் படங்களும் ஒளிரும் படங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தம் செய்யும் பகுதியினை மட்டும் இன்று காலை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின். திறந்து வைத்தார். அத்துடன், பெரியார் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தையும், ஜான்சி ராணி பூங்காவில் தொல்பொருள் அங்காடிகள் அமைக்கும் கட்டிடத்தையும் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *