• Mon. Apr 29th, 2024

வெளிநாடுகளில் இருந்து லேப்டாப் இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அரசு..!

Byவிஷா

Aug 4, 2023

வெளிநாடுகளில் இருந்து லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்லெட் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட மாடல் லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்லெட்டுகளை இனி இறக்குமதி செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர், அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் ஃபேக்டர் கம்ப்யூட்டர், லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை இனி இறக்குமதி செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.
அதாவது HSN 8741 பிரிவின் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உரிய லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இவற்றை இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது. இவற்றை இ-காமர்ஸ் போர்ட்டல்களில் இருந்து, தபால் அல்லது கூரியர் மூலமாக வாங்கலாம் என்றும், இதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளும் பொருந்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பேக்கேஜ் விதிகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சோதனை, தரப்படுத்தல் மற்றும் மதிப்பீடு, பழுது மற்றும் மறுஏற்றுமதி, மற்றும் தயாரிப்பு மேம்பாடு போன்ற நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளவை என இவற்றில் 20 பொருட்கள் வரை இறக்குமதி செய்து கொள்ளலாம். இதற்கும் உரிமம் தேவை என கூறப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக இறக்குமதி செய்யப்படுகிறதோ, அதற்காக மட்டும் தான் அவற்றை பயன்படுத்த வேண்டுமென்றும், விற்பனை செய்ய கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
2023-24ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் லேப்டாப், டேப்லெட்டுகள் மற்றும் தனிப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் இறக்குமதியின் மதிப்பு 19.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பீடுகையில் இறக்குமதி 6.25 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. எலக்ரானிக் பொருட்களின் இறக்குமதி 10சதவீகிதம் வரை உள்ளது. எனவே இவற்றை குறைக்கும் விதமாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *