சென்னை பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது.அப்போது ரயிலில் இருந்து ஓட்டுநர் வெளியே குதித்தததால் அவருக்கு காயம் ஏற்பட்டது.எனினும்,ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் ஏற்படவில்லை.
ரயில் விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து, சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்து ஏற்பட்டது தொடர்பாக ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன்படி,இந்திய தண்டனை சட்டம் 279,ரயில்வே சட்டப்பிரிவு 151 மற்றும் 154 ஆகிய பிரிவுகளின் கீழ் ரயில் ஓட்டுநர் மீது எழும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிந்தனர்.சென்னை கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்காராம் அளித்த புகாரில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்னை ரயில்வே பாதுகாப்பு அதிகாரி பிரேம்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணை குழு நேற்று அமைக்கப்பட்டது.இக்குழுவில் மெக்கானிக்,எலக்ட்ரிகல் துறை அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்த்திருந்தது.
இந்நிலையில்,சென்னை மின்சார ரயில் விபத்துக்கு ரயில் ஓட்டுநரே காரணம் என்றும்,பிரேக்கிற்க்கு பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை ஓட்டுநர் அழுத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ரயில்வே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.