• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மின்சார கட்டணம் 85% உயர்த்தப்பட்டதை ஏற்க முடியாது – விக்கிரமராஜா..,

ByS.Ariyanayagam

Aug 17, 2026

அரிசி உள்ளிட்ட விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள் பொறுப்பல்ல. கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து வரும் அரிசி குறைந்ததாலும், விவசாயத்திற்கு போதிய நீர்வளம் இல்லாத காரணத்தாலுமே விலை உயர்ந்துள்ளது என விக்கிரமராஜா தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில்
திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சங்கம் சார்பில், 22ம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது, சங்கத்தின் சார்பில் மத்திய அரசுக்கு 5 கோரிக்கை மற்றும் தீர்மானங்களும், மாநில அரசுக்கு 9 கோரிக்கை மற்றும் தீர்மானங்களும், திண்டுக்கல் மாநகராட்சிக்கு 7 கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, “​திண்டுக்கல் வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய பேருந்து நிலைய பணிகளை போர்க்கால அடிப்படையில், மிக விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
கடந்த ஆட்சியின் போது கட்டட வரி உயர்த்தப்பட்டதால், மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தற்போதைய அரசும் கட்டடங்களை மீண்டும் வரைமுறைப்படுத்த அளவீடு செய்யும் பணிகளை தொடங்கி, அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனை அரசு முறையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வணிகர்களை அச்சுறுத்தும் ஜி.எஸ்.டி மக்களின் பொருளாதார நிலைப்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டுதான் வரி உயர்வை அமல்படுத்த வேண்டும். தற்போது பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகிறார்கள். இது சாமானிய சிறு வணிகர்களை பெரிதும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல் அதிகரித்து, ரூ.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது. வரி செலுத்தும் நடைமுறைகளை தொடர்ந்து எளிமைப்படுத்தினால், இந்த வசூல் ரூ.3 லட்சம் கோடியாக உயரும். எனவே, வரி வசூல் என்ற பெயரில் வணிகர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் கைவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், அம்மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட வேண்டும்.

இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு மாநில அரசு உதவித்தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும். தமிழ்நாடு பட்ஜெட்டில் வணிகர்களுக்கான எந்த அறிவிப்பும் வராதது வருத்தமளிக்கிறது. விரைவாக முதலமைச்சர் விஜயை சந்தித்து எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வழங்கவுள்ளோம். முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பு வணிகர்களிடம் ஆலோசனை செய்தும், எங்களது கருத்துக்கள் அதில் பதிவு செய்யப்படவில்லை. முதலமைச்சரை சந்தித்த பிறகு அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே எங்களது முடிவு எடுக்கப்படும்.
அரிசி உள்ளிட்ட விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள் பொறுப்பல்ல. கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து வரும் அரிசி குறைந்ததாலும், விவசாயத்திற்கு போதிய நீர்வளம் இல்லாத காரணத்தாலுமே விலை உயர்ந்துள்ளது.

தற்போதைய குறுவை சாகுபடி சரியாக இல்லையென்றால், மேலும் விலையேற்றம் ஏற்படும். இதனை தவிர்க்க, ரோடுகளில் வைக்கப்பட்டு மழையில் முளைத்து வீணாகும் நெற்பயிர்களைக் காக்க, மற்ற துறைகளைப் போல விவசாயத்துறைக்கும் முழுமையாக நிதி செலவு செய்து நெற்பயிர்கள் வீணாகாமல் காக்கப்பட வேண்டும்.
நீராதாரத்தைப் பெருக்க கால்வாய்கள், குளங்களை சீரமைக்கும் அரசின் அறிவிப்பை முழுமையாக செயல்படுத்த, ஓய்வுபெற்ற அப்பழுக்கற்ற ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடத்தில் அமர்த்தி ஒவ்வொரு ஏரி, குளங்களையும் சீரமைத்து முறைப்படுத்த வேண்டும். இதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வழங்கும்.

வருங்காலத்தில் நீராதாரம் சரியாக இருந்தால் மட்டுமே பொருளாதாரம் மேம்பட்டு, விவசாயப் பொருட்கள் தடையின்றி கிடைத்து விலைவாசி குறையும்.
புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவர்களின் செயல்பாடுகளை முழுமையாக மதிப்பிட இக்காலகட்டம் போதாது. ஆறு மாதங்கள் கடந்த பின்னரே அரசின் செயல்பாடுகள் குறித்த எங்களது தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்க முடியும்.
மின்சார கட்டணம் உயர்த்தப்படாது என ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில், தற்போது 85% வரை உயர்ந்துள்ளதை ஏற்க முடியாது. இதனை அரசு மறுபரிசீலனை செய்து குறைக்க வேண்டும்.

சொத்துவரி மேலும் உயர்த்தப்பட்டால் தமிழகம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்கள் கட்டணம் செலுத்த முடியாமல் சீல் வைக்கப்படும் அபாயம் உள்ளது. மக்கள் சக்தியைப் புரிந்து கொண்டு வரியை உயர்த்த வேண்டும்.
ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை அரசு கட்டாயம் நிறுத்த வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்ற தனது வாக்குறுதியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்னும் நிறைவேற்றவில்லை. இதை வலியுறுத்தி விரைவில் அவரை டெல்லியில் சந்திக்கவுள்ளோம். சுங்கச்சாவடிகளுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றார் அவர்.

திண்டுக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தின் சர்ச்சை குறித்த நிரூபரின் கேள்விக்கு, “நகரங்களின் விரிவாக்கத்தால் பேருந்து நிலையங்களை ஊரை விட்டுத் தள்ளி அமைப்பது இயல்புதான்.
இருப்பினும், புதிய இடத்தை தேர்வு செய்யும் முன்பாக அரசு அதிகாரிகள், பொதுமக்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் முறையாக கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தினால் எவ்வித சர்ச்சையும் எழாது. அவ்வாறு கருத்துக் கேட்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தால், அரசு அதனை உடனடியாக முறைப்படுத்த வேண்டும்” என்றார்.