• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: களத்திலிறங்கும் சிபிஐ

தஞ்சாவூரில் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை (62) காவல் துறையினர் கைது செய்தனர்.
ஆனால், மாணவி மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகத்தால் வற்புறுத்தப்பட்டதாக பாஜகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது தொடர்பாக வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியானது. அதே சமயம், மதமாற்றம் செய்யவில்லை என கூறிய வீடியோவும் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியது.
மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். செல்போன், சிடி உள்ளிட்ட பொருட்களை ஹைதராபாத் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து வாதாடிய அரசு வழக்கறிஞர், இவ்வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 53 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வாக்குமூலங்கள் முழுமையாக பதிவு செய்யப்படுகிறது.

அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு தயாராக உள்ளது. எதையும் மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. மாணவியின் வீடியோ ஜன. 17-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.மாணவி உயிரிழக்கும் வரை காத்திருந்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது. தமிழகத்தில் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர் என்றார்.

மாணவி படித்த பள்ளி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , எங்கள் பள்ளி 160 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்துக்கள், இஸ்லாமிய மாணவர்கள் அதிகளவு பயில்கின்றனர். எங்கள் பள்ளியில் யாரும் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை. அவரது தற்கொலை தற்போது அரசியலாக்கப்பட்டுள்ளது. எந்த விசாரணைக்கும் பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பினைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று (மாணவியின் தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணைய குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் ஆணைய தஞ்சை மாவட்ட தலைவர் பிரியங்கா கனுங்கோ தலைமையிலான குழுவினர் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை வேலுவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.