• Mon. Apr 29th, 2024

கேள்வி கேட்ட இளைஞரால் பிரச்சாரத்தை நிறுத்திய தங்க தமிழ்ச்செல்வன்

Byவிஷா

Mar 29, 2024

தேனி மக்களவைத் தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வன் பிரச்சாரத்தின் போது, ‘ரோடு சரியில்ல’ என இளைஞர் ஒருவர் கேள்வி கேட்டதால், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடக்கு ஒன்றிய பகுதியில் தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 28 கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார். இதில் மாலையில் எ.புதுப்பட்டி ஊராட்சி, கீழவடகரை ஊராட்சி, வடுகபட்டி பேரூராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார். இறுதியாக கீழவடகரை ஊராட்சியின் அழகர்சாமிபுரம் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அழகர்சாமிபுரம் அண்ணா நகரை சேர்ந்த ஜெகதீஸ் என்ற இளைஞர் தங்களது பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி செய்து தரவில்லை என கூறி பரப்புரையின் போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார். அப்பொழுது தங்கதமிழ்செல்வன் பேச்சை நிறுத்தி தம்பி நான் காலையில் இருந்து பேசிக் கொண்டு இருக்கிறேன், தொண்டை வலிக்கிறது. கொஞ்சம் அமைதியாக இரு, என்று கூறி தனது பரப்புரையைத் தொடர்ந்தார்.
இருந்த போதும் அந்த இளைஞர் மீண்டும் சாலை வசதி குறித்து கேள்வி கேட்டதால் பரப்புரையை சுருக்கமாக முடித்துக் கொண்டு பரப்புரை வாகனத்தில் இருந்து கீழ் இறங்கி அவரது காரில் கிளம்பிச் சென்றார். இதனிடையே சாலை வசதி கோரி கேள்வி கேட்ட இளைஞரை திமுக நிர்வாகிகள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடவே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் இளைஞரை திமுக நிர்வாகிகளிடம் இருந்து மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *