• Sat. Apr 27th, 2024

கலைஞரை விட. . . ஸ்டாலின் ரொம்ப மோசம்.. சொல்றது யாருன்னு தெரியுமா ?

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பிலிருந்தே அதிமுக அமைச்சர்களாக இருந்தவர்களை மிகக் கடுமையாக விமர்சித்தே வந்தார். மேலும் அவர்கள் ஊழல் செய்திருப்பதாகவும் அவர்களை நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுப்பேன் என்றும் வலியுறுத்திக் கொண்டே இருந்தார். சொல்லப்போனால் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் அது இடம்பெற்றிருந்தது. சொன்னது போலவே ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே முன்னாள் அமைச்சர்கள் பலரின் வீடுகள், சொந்தமான இடங்கள் என லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டை ஏவிவிட்டார். இது அரசியல் பழிவாங்கும் செயல் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தொடங்கி அனைவருமே விமர்சித்தனர்.

இச்சூழலில் மற்றொரு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தேர்தல் நேரங்களில் செய்த செயல்களுக்காக உள்ளே தூக்கி போட்டிருக்கிறது திமுக அரசு. இது அதிமுக தலைவர்களிடையே கோபத்தை அதிகரித்துள்ளது. அதனை எஸ்பி வேலுமணி கட்சிக் கூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், எஸ்.பி.வேலுமணி. தலைமையில் கோவை மாநகர், புறநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், “அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. ஒரு சிலர் திமுகவுக்கு செல்கின்றனர்.
அவர்களுக்கு அக்கட்சியில் மதிப்பில்லை. சென்ற வேகத்தில் திரும்பிவர தயாராகின்றனர். ஒருவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால், அடுத்த முறை மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், திமுகவுக்கு சென்றால் வாய்ப்புக்கான கடைசி இடத்தில் இருக்க வேண்டி வரும். திமுகவினர் எப்படி இந்த அளவுக்கு வெற்றி பெற்றனர் என்று மக்களே குழம்பிப் போயுள்ளனர். அதிமுகவினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய்வழக்கு போடுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். ஜெயக்குமாரைப் போல எங்களையும் சிறையில் அடையுங்கள்.

அதற்குமேல் உங்களால் என்ன செய்ய முடியும். இதற்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. பொய் வழக்குகளில் நீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கூட இவ்வளவு பழிவாங்கும் உணர்ச்சி இல்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் மோசமாக உள்ளார். யார், யார் திமுகவை, முதல்வரை எதிர்த்து பேசுகிறார்களோ, அவர்கள் மீது தற்போது பொய் வழக்கு போடுகின்றனர். எனவே, அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். ஜெயக்குமார் கைதை கண்டித்து வரும் 28-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிகமானோர் திரண்டுவந்து கலந்துகொள்ள வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *