• Sat. May 4th, 2024

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

Byவிஷா

Jan 19, 2024

வருகிற 25ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும். பக்தர்கள் தைப்பூச திருவிழவினையொட்டி, விரதமிருந்து முருகனுக்கு விதவிதமான காவடிகளைச் சுமந்து நடைப்பயணமாக பல ஊர்களில் இருந்து பழனி மலையேறி முருகனை தரிசித்து செல்கிறார்கள். இந்த வருட தைப்பூசத் திருவிழா, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று ஜனவரி 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. வருடம் முழுவதும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருவிழா நடைப்பெற்றாலும் தைப்பூச திருவிழா கூடுதல் விசேஷம். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் கேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக, காவடி சுமந்து சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
பெரும் பிரசித்தி பெற்ற இந்த திருவிழா இன்று பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் வரும் ஜனவரி 24-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெறும். அன்று இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரத உற்சவம் நடைபெறும்.
தொடர்ந்து, வரும் 25-ம் தேதி தைப்பூச திருவிழாவும், அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மேல் திரு தேரோட்டமும் நடைபெற உள்ளது. 28-ம் தேதி திருவிழாவின் கடைசி நாளன்று தெப்பத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, தங்கும் இடங்கள், கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *