• Fri. May 3rd, 2024

26 வருடங்களாக ஆளில்லாமல் இருக்கும் தாய்லாந்தின் ‘சந்திரமுகி’ பங்களா..!

Byவிஷா

Sep 27, 2023

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான பாங்காக்கில் பல ஆண்டுகளாக ஒரு மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் காலியாக இருக்கிறது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாங்காக்கை நோக்கிப் படையெடுக்கிறார்கள். உலகிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நகராக பாங்காங் இருக்கிறது. உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவியத் தாய்லாந்தின் உணவு வகைகள், வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவை காரணம் என சொல்லலாம். அதேநேரம் அங்கே வேறு சில வினோதமான விஷயங்களும் இருக்கவே செய்கிறது.
அதாவது பாங்காக் நகர் முழுக்க வெறிச்சோடிய கட்டிடங்கள் பல இருக்கிறது. இதில் சில கைவிடப்பட்ட கட்டிடங்களுக்குப் பெரிய வரலாறும் இருக்கிறது. அதேநேரம் சில கட்டிடங்களுக்கு மோசமான கதைகளும் உள்ளன. அப்படிக் கைவிடப்பட்ட ஒரு கட்டிடம் தான் இந்த 49 மாடி கட்டிடமாகும். கடந்த 26 ஆண்டுகளாக இந்தக் கட்டிடம் காலியாகவே இருக்கிறது. பலரும் இதைப் பேய் டவர் என்றே அழைக்கிறார்கள். இதன் பின்னணியில் இருக்கும் கதையை நாம் பார்க்கலாம்.
இதை மக்கள் கோஸ்ட் டவர் என்று அழைத்தாலும் இதன் உண்மையான பெயர் சாத்தோர்ன் யூனிக் டவர் என்பதாகும். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் வர்த்தகம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டிய கட்டிடம் இப்போது மூடப்பட்டு மிக மோசமாக இருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் பொதுமக்கள் செல்லவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் சட்டவிரோதமாக உள்ளே சென்று வீடியோ எடுத்து வெளியிடுகிறார்கள்.

புகழ்பெற்ற தாய்லாந்து கட்டிடக்கலை வல்லுநரான ரங்சன் டோர்சுவான் என்பவர் கடந்த 1990இல் பாங்காங் மைய பகுதியில் இந்த அடுக்குமாடி சொகுசு கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பணிகளையும் கையோடு தொடங்கினார். உயர் வகுப்பை சேர்ந்த மக்களுக்கு ஆடம்பரமான கட்டிடமாக இது இருக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். ஆனால், பாவம் சில ஆண்டுகளிலேயே கட்டிடம் அனாதையாக நிற்கும் என்று அவர் கனவிலும் யோசித்திருக்க மாட்டார்.

கட்டிட பணிகள் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே முதலில் பேரிடியாக ஒரு சம்பவம் நடந்தது. அதாவது, அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கொல்லத் திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் 1993ஆம் ஆண்டு ரங்கசனை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். கொலை எதுவும் நடைபெறவில்லை என்ற போதிலும், அவர் பல ஆண்டுகள் சிறையிலேயே இருந்தார். 2008இல் டோர்சுவான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 2010இல் அவர் விடுவிக்கப்பட்டார்.

அவரது கைதால் கட்டிட பணிகளில் தோய்வு ஏற்பட்டது. இந்த நேரத்தில் தான் ஆசிய நாடுகளை உலுக்கிப் போட்ட ஆசிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதான் தாய்லாந்து பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த இரண்டும் சேர்த்து கட்டுமான பணிகளை முடக்கிப் போட்டது. 1997க்கு பிறகு அங்கே கட்டுமான பணிகள் நடக்கவில்லை. 80சதவீத பணிகள் முடிக்கப்பட்ட போதிலும், 49 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் அப்படியே நின்று போனது.

அப்போது முதல் இது பேய் பங்களாவாகவே இருக்கிறது. இந்த கட்டிடத்திற்கு இப்படியொரு தலைவிதி ஏற்பட உள்ளூர் மக்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். இடுகாட்டின் மீது இது கட்டப்பட்டதே இந்த முடிவுக்குக் காரணம் எனச் சிலர் கூறுகிறார்கள். இப்படி இந்தக் கட்டிடம் குறித்து பல்வேறு கதைகள் பரவி வந்த நிலையில், கடந்த 2014இல் அங்கு நடந்த ஒரு சம்பவம் இதை மேலும் பயங்கரமானதாக மாற்றியது.

அதாவது கடந்த 2014 டிசம்பரில் இந்தக் கட்டிடத்தின் 43வது மாடியில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது அங்கே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்தக் கட்டிடம் குறித்து மேலும் மேலும் பயங்கரமான கதைகள் உலா வர ஆரம்பித்தது. இவ்வளவு பெரிய கட்டிடத்தில் 26 ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததே இந்த கதைகளுக்கு அடித்தளம் இட்டது.

இதைப் பயன்படுத்திக் கடந்த 2017ஆம் ஆண்டின் தி ப்ராமிஸ் என்ற பேய் படத்தின் ஷ_ட்டிங்கும் இங்கே நடந்தது. நகரின் மையப் பகுதியில் இருந்தாலும் கூட இங்கே நடந்த மோசமான சம்பவங்களால் இது இப்போது வெறிச்சோடி இருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் மக்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கட்டிடத்தைச் சுற்றிப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால், அந்த பாதுகாவலர்களுக்கே கூட உள்ளே நுழையத் துணிச்சல் இல்லையாம். அந்தளவுக்கு அச்சுறுத்தும் பங்களாவாக இது இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *