காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.
மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று காரணமாக சுழன்றடித்தது. இதில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின்கம்பங்கள் சரிந்தன; வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்த புயலால் லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு புயலில் சிக்கி ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. புயல் தாக்கியதில் அந்த நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.
இந்த புயல் காரணமாக நியூ ஆர்லியன்ஸ் நகரில் ஒருவர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.