சென்னையில் வீட்டு வாடகை பெங்களூருவை மிஞ்சும் அளவிற்கு பல மடங்கு உயர்ந்துள்ளதால் வாடகைதாரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சென்னை பெருநகர மாநகராட்சி ஆண்டுதோறும் சென்னையில் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்துவதற்கு அனுமதி தந்து தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் வீட்டு வாடகைகளின் மதிப்பு உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நகரத்திற்குள்ளே பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதிகளுக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என ஏராளமானவர்கள் விரும்புவதால் நகரத்தினுள் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்திருப்பதாக இங்கே செயல்பட்டு வரக்கூடிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன. நகருக்கு வெளியில் இருக்கும் இடங்களில் எல்லாம் தற்போது தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆனால் கடைகள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்கள் வளர்ச்சி அடையவில்லை எனவே மக்கள் நகரத்திற்குள்ளேயே வாடகை வீடு தேட தொடங்கி விட்டார்களாம். குறிப்பாக சென்னையில் ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கேகே நகர், ராமாபுரம், நெசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வாடகை வீடுகளுக்கான தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் இங்கே இரவு 12 மணி வரை உணவகங்கள் திறந்து இருப்பது மற்றும் அருகிலேயே மால்கள் உள்ளிட்டவை இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த பகுதிகளில் வீட்டு வாடகைகளின் மதிப்பும் 15 முதல் 20சதவீதம் வரை உயர்ந்துள்ளதாம். அதே வேளையில் தற்போது சென்னை மாநகராட்சி சொத்து வரியை உயர்த்தி இருப்பதால் அதைக் காரணமாக கொண்டு வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை உயர்த்துவதாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
மத்திய அரசின் நிதிகளைப் பெற வேண்டுமெனில் தாங்கள் சொத்து வரியை உயர்த்த வேண்டியது கட்டாயம் ஆகிவிட்டது என சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக சொத்து வரியை உயர்த்த கூடாது பொதுமக்களின் மீது அந்த சுமையை சுமத்த கூடாது என தங்களுடைய நிர்வாகம் முயற்சி செய்து வந்ததாகவும் ஆனால் தற்போது மத்திய அரசு பதினைந்தாவது நிதி கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்துமாறு தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் அதன் ஒரு பகுதியாக சொத்து வரியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.
ஏப்ரல் முதல் ஜூன் இடைப்பட்ட காலத்தில் மட்டும் சென்னை நகரத்தில் வீடுகளின் மதிப்பு 9.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் வீட்டு வாடகை மதிப்பு உயர்ந்துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குடிப்பெயர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் முதலில் தான் பல்லாவரத்தில் இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு 12,500 வாடகை செலுத்தியதாகவும் 6 மாதங்களில் தன்னுடைய வீட்டு உரிமையாளர் வாடகை 15000 ரூபாய் என்றும் 1000 ரூபாய் பராமரிப்பு தொகை என்றும் உயர்த்தி இருப்பதாக தெரிவிக்கிறார். இதேபோல சென்னையில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு ஆகிய பகுதிகளிலும் வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் ஐடி துறையில் பணியாற்றும் வாடகைதாரர்களையே விரும்புகிறார்களாம்.