• Sun. Jun 4th, 2023

ஆலயம் அறிவோம் :ஊர்காடு அருள்மிகு ஸ்ரீ திருகோஷ்டியப்பர் ஆலயம்

இறைவர் கோட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கோட்டியப்பர், கோட்டிலிங்கம் என்றும் சொல்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்த கோயில்… இன்று அமைதியே உருவாகத் திகழ்கிறது. சேத்தூர் மற்றும் ஊர்க்காட்டு ஜமீன்தார்களின் சிறப்பான கவனிப்பாலும், உள்ளூர்க்காரர்களது பராமரிப்பாலும் திருவிழாக்கள் முதலானவை விமரிசையாக நடந்துள்ளன.

அரிகேசரி பராங்குச மன்னன் (கி.பி. 670- 700), சீமாற சீவல்லபன் (கி.பி. 835- 852), வீரபாண்டியன் (பத்தாம் நூற்றாண்டு), முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216- 1238), பிற்பாடு வந்த சேர மன்னர்கள் முதலானோர் இந்த ஆலயத்துக்கு பல திருப்பணிகளையும் கட்டுமானப் பணிகளையும் செய்துள்ளனர். நெல்லையப்பர் ஆலயத்தைப் போல், திருவிழா

கொண்டாட்டங்கள் மன்னர்கள் காலத்தில் முறையாக நடந்தேறியுள்ளன. மாசி பிரம்மோத்ஸவத் திருவிழா, பத்து நாள் விழாவாக கொண்டாடப்பட்டதாம்! இதில் ஒன்பது நாளும், ஊரில் எவர் வீட்டிலும் சமையலே இருக்காதாம். எல்லாமே கோயிலில்தான்! பந்தல் போடப்பட்டு எந்நேரமும் பந்தி பரிமாறியபடியே இருப்பார்களாம்! ‘பத்து நாள் விழாவில் ஒன்பது நாள்தான் சாப்பாடா… அப்ப மீதி ஒரு நாள்..?’ என்று கேட்கிறீர்களா? இதில், ஒரு நாள் ஏகாதசி வருமாம். அன்றைக்கு விரதம் அனுஷ்டிப்பதால், அன்னதானம் இருக்காதாம்.

ஐப்பசி திருக்கல்யாணம், கந்தர்சஷ்டி, திருவாதிரை (இதற்கென்றே பிரமாண்டமான சபாபதி மண்டபம் உண்டு!) என்று எந்த விழாக்களும் குறைவின்றி நடந்ததாம். பெரிய திருவிழாக்கள் ஆலயத்தில் நடந்து சுமார் 25 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்கின்றனர். கும்பாபிஷேகம் நடத்தியே ஆண்டுகள் பலவாயிற்றாம்! பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ளது.முதலில், இங்கு உறையும் கோட்டீஸ்வரர் பற்றி ‘தாமிரபரணி மகாத்மியம்’ கூறுவதைப் பார்ப்போம்.

சங்கமாமுனி எனும் ரிஷி, வீரசேன மகாராஜாவுக்குக் கூறுவதுபோல் அமைந்துள்ளது இந்த மகாத்மியம்.

கடனா நதியும், தாமிரபரணி நதியும் சங்கமிக்கிற ஸ்நானக் கட்டத்தில் நீராடி, தன் நித்யகர்மாக்களைச் செய்து கொண்டிருந்தார் அகத்தியர். இந்தப் புண்ணிய காரியத்தின்போது அத்திரி, கபிஞ்ஜலன், வியாசர், சுமதி, நாரதன், தும்புரு, பர்வதன், வருணபுத்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர். அனுஷ்டானங்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டு தாத்ரீவனத்துக்கு (நெல்லிக்காடு) புஷ்பக விமானத்தில் ஏறிப் புறப்பட்டனர் (இதுதான் இன்றைய ஊர்க்காடு).
நவரத்தினங்களால் அலங்கரிக்கப் பட்ட அகத்தியரது பிரமாண்டமான விமானம், தாத்ரீவனத்தில் இறங்கியபோது அந்தப் பகுதி மிகுந்த அச்சம் நிறைந்ததாகக் காணப்பட்டது. எண்ணற்ற மரம், செடி, கொடிகளால் சூழப்பட்ட காட்டில் துஷ்ட பிராணிகளும் கூட ஒருவித அச்சத்துடன் சுற்றித் திரிந்தன. இனிமையாய் ரீங்காரமிட்டு உற்சாகமாகப் பறந்து திரிய வேண்டிய சில்வண்டுகள், பயத்துடன் இருந்தன. ஆகாயத்தில் பறக்கும் சுதந்திரம் பறிபோய் விடுமோ என்று கவலைப்பட்டன அங்கு வாழ்ந்து வந்த பறவைகள்!

ஏன் இப்படி? என்ன காரணம்?

ஒரே காரணம் – பன்றிமுகி என்கிற ராட்சசிதான். கொடூரமான பன்றி முகத்துடன் கூடிய அரக்கி ஒருத்தி, அந்த வனத்தையே தன் வசப்படுத்தி வைத்திருந்தாள். இவளது காவலுக்கும் ஏவலுக்கும் அசுரர்கள் வேறு உடன் இருந்தனர்.

இறைத்தன்மை கொண்ட பூமியாக இது மாற வேண்டாமா? இதனால்தான் அகத்தியர் இங்கு வருகை புரிந்திருக்கிறார் போலும். அகத்திய முனியின் வருகையை அறிந்த வன ஜீவராசிகள் மகிழ்ந்தன. இவை ஒன்று திரண்டு அகத்தியரிடம் வந்து, ராட்சசியின் அட்டகாசம் குறித்து முறையிட்டன. பெரிய பாறாங்கற்களை உருட்டித் தள்ளி இம்சிப்பதையும், தனக்கு இரையாக பல ஜீவராசிகளை தின்று கொழுப்பதையும் சோகம் ததும்ப எடுத்துச் சொல்லின. அனைத்தையும் கேட்டறிந்த அகத்தியர், ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

பன்றிமுக ராட்சசியை அழிக்கும் முகமாக ஒரு வேள்வியை நடத்தி, அதில் இருந்து ஒரு பூத மனிதனை உருவாக்கினார் அகத்தியர். நெருப்பு போன்ற நிறமும் வீரமும் கொண்ட அந்த பூத மனிதன் பயங்கரமாக இருந்தான்; கொடூரமான பற்களைக் கொண்டிருந்தான்; ஆயுதமாக கதையை வைத்திருந்தான்! பன்றிமுக ராட்சசியுடன் கடும் போர் புரிந்தான். தனது கதாயுதத்தால் அவளது உடலெங்கும் பலமாகத் தாக்கினான். இதில் ராட்சசி இறந்தாள். வனத்தை ஒட்டிய ஊர்களில் வசித்து வந்த மனிதர்களும் வனத்தில் வாழ்ந்து வந்த விலங்குகளும் மகிழ்ந்தன. அகத்தியரின் புகழ் பாடி அவரைப் போற்றினர்.

இதையடுத்து, சுபயோக சுபதினத்தில்… தாத்ரீவனத்தில் (ஊர்க்காட்டில்) சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்யும் பணியில் இறங்கினார் அகத்தியர். இந்தப் பணியில் அகத்தியரின் மனைவியான லோபாமுத்திரையும் ஈடுபட்டாள். தவிர அத்திரி மகரிஷி, நாரதன், ஹயக்ரீவர் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த அழகிய பகுதியில் உள்ள மணலைக் கொண்டே சிவலிங்கம் ஒன்றை உருவாக்க முயன்றார் அகத்தியர். மணலைத் திரட்டி, தன் கைகளினால் அதை லிங்கமாகப் பிடிக்க முற்படும்போது அந்த மணல் சட்டென்று கலைந்தது. இதேபோல் அடுத்தடுத்து முயன்றும் பலனில்லை.

மனிதர்கள் என்றால், ஆத்திரம் கொள்வர். அகத்தியர்… மகான் அல்லவா? எனவே, களைப்புடன் ஈசனிடமே கேட்டார் ”ஓ சம்புவே… சிவலிங்கம் உருவாக்கி உன்னை பிரதிஷ்டை செய்யும் என் முயற்சியில் ஏன் கோட்டி செய்கிறீர்?” (‘கோட்டி’ என்பதற்கு பிடிவாதம் என்றும், ஒன்று சேர்த்தல் என்றும் பொருள் உண்டு. இந்த இரு பொருளுமே அகத்தியரின் கேள்விக்குப் பொருந்தும்.)

இறுதியாக, மணலை பாணம் போல் திரட்டி, அதைத் தன் மார்பில் அணைத்துக் கொண்டு அகத்தியர் மெனக்கெடுவதைப் பார்த்த ஈசனே மனமிரங்கினார். அதே நிலையில் – அப்படியே பிரதிஷ்டை ஆனார் இறைவன்.

லிங்கங்களில் பல வகை உண்டு. தானே உருவானதை ‘சுயம்புலிங்கம்’ என்பர்; விநாயகர் போன்ற கணங்களால் உருவானது ‘கணலிங்கம்’; ரிஷிகள் மற்றும் முனிவர்களால் பிரதிஷ்டை ஆன லிங்கம் ‘ஆரிடலிங்கம்’; ஆற்று மணலைக் கொண்டு பிரதிஷ்டை செய்தால் ‘க்ஷணிகலிங்கம்’ என்பர். ஊர்க்காட்டில் அகத்தியரால் பிரதிஷ்டை ஆன லிங்கம்- க்ஷணிகலிங்கம்!

‘மணலால் செய்திருந்தாலும் இதே நிலையில் என்றென்றும் சாஸ்வதமாக இருந்து, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இன்னருள் புரிவேன். இங்கு நீர் ஸ்நானம் செய்த இடம் ‘முனி தீர்த்தம்’ எனப்படும். எவரொருவர் இந்த முனி தீர்த்தத்தில் நீராடி விட்டு என்னை வணங்குகிறார்களோ, அவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறக்க அருள் புரிவேன். சகல போகங்களையும் அருள்வேன்’ என்று வாக்குக் கொடுத்து விட்டு, அகத்தியர் மற்றும் உடன் இருந்தவர்களை ஆசிர்வதித்தார் இறைவனார்.

அத்துடன், ”உம்மால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திலேயே பார்வதிதேவியும் வாசம் செய்வாள். எனவே, என்னைப் பிரார்த்திப்பவர்களுக்கு வேண்டிய வரங்களை அருள்வோம். மணலால் லிங்க வடிவை ஆலிங்கனம் செய்து மீண்டும் மீண்டும் என்னை உமது மேனியுடன் இருத்திய அடையாளம் எம் திருவடிவில் உள்ளது. சந்திர- சூரிய- நட்சத்திர தேவதைகள் உள்ளவரை நித்திய சந்தோஷியாக யாம் இங்கேயே நிலைத்து வாசம் புரிவோம்.

எமது சிரசில் இருக்கும் சந்திர பிறையில் இருந்து அமுத நீர்த் திவலைகள் லிங்கத்தின் மேல் எப்போதும் விழுந்தபடியே இருக்கும். எனவே, இது பிந்துஸ்தானம் என வழங்கப்படும். மணலால் நீர் கோட்டி (ஒன்று சேர்த்து) செய்து வடிவமைத்த லிங்கம் என்பதால், இனி ‘கோட்டீஸ்வரர்’ என என்னை அழைப்பர்” என்று அருளி மறைந்தார் ஈசனார்.

பிறகு பிராண பிரதிஷ்டை முதலானவற்றை ஆகம விதிப்படி நடத்தினார் அகத்தியர். மனைவி லோபாமுத்திரை மற்றுமுள்ள ரிஷிகளோடு இணைந்து நறுமணமுள்ள மலர்களை இறைவனுக்கு அணிவித்து, பூஜித்துப் போற்றினார் அகத்தியர். இனி, ஆலய தரிசனம்!

உள்ளே நுழைவதற்கு முன் வரிசைக்கு எட்டாக, இரு பக்கமும் பதினாறு கருங்கல் தூண்கள் காணப்படுகின்றன. விசேஷ காலங்களில் இந்த கருங்கல் தூண்களைக் கடைக்கால்களாகக் கொண்டு பந்தல் அமைத்து அலங்கரிப்பார்களாம். இதைத் தாண்டி, சேரர்கள் காலத்தை நினைவுபடுத்தும் கூரை அமைப்பு. பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்திதேவர், அதிகார நந்தி, சூரிய தேவர், சந்திர பகவான் ஆகியோரை பிரமாண்டமான மண்டபத்தில் தரிசிக்கிறோம்.

நவக்கிரகம், சபாபதி மண்டபம், மணி மண்டபம் (வழிபாட்டுக் காலங்களில் இங்கே ஒலிக்கும் மணியின் ஓசை பல மைல் தொலைவுக்குக் கேட்குமாம்!) மற்றும் விநாயகர், சுப்ரமண்யர் ஆகியோரையும் தரிசிக் கிறோம்.

பிராகார வலம் வருவோம். திருமாளிகைப் பத்தி அமைப்புடன் காணப்படுகிறது பிராகாரம். வலத்தின்போது ஜுரதேவர், தனி அடியார்கள்- தொகை அடியார்கள்- சேக்கிழார் உள்ளிட்ட 74 அடியார்களின் தரிசனம் இங்கே ஒருங்கே கிடைப்பது சிறப்பு. சனகாதி முனிவர்கள் இன்றி, மான், மழு ஏந்தி சின்முத்திரையுடன் ஒரு திருக்கரத்தைத் தொங்க விட்டபடி விரித்த சடையுடன் அருள் பாலிக்கும்

தட்சிணாமூர்த்தி விக்கிரகம், தெளிவான – திருத்தமான திருமேனி! இந்த ஆலயத்தில் இவர் ஒருவர்தான் – கோஷ்ட மூர்த்தி!
விநாயகர், சப்தமாதர்கள், உபதேச வீரபத்திரர், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், பைரவர், சனி பகவான் என்று ஏராளமான திருமேனிகளின் தரிசனம். செல்லரித்துப் போன உற்ஸவ வாகனங்களைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. பூஜைக்குத் தேவையான மலர்மாலைகளைக் கட்டுவதற்கென திருப்பூப்பலகை எனப்படும் பூக்கட்டும் மேடை காணப்படுகிறது.

அடுத்து… அர்த்த மண்டபத்துடன் கூடிய அன்னையின் கருவறை. வலக் கரத்தில் செண்டை ஏந்தி, இடக் கரத்தைத் தொங்க விட்டபடி காட்சி தருகிறாள் அன்னை சிவகாமி! பள்ளியறையும் உண்டு. மன்னர்களின் திருப்பணி உபயத்தால் எண்ணற்ற மண்டபங்கள், சிற்பங்கள் நிறைந்த தூண்கள் என்று பிரமிக்க வைக்கிறது ஆலயம்.

ஆலய நாயகனாம் கோட்டீஸ்வரரைத் தரிசிக்கச் செல்கிறோம். நந்திதேவர், துவார பாலகர்கள், விநாயகர் ஆகியோர் மண்டபத்தில் அருள்கிறார்கள். இதைத் தாண்டி அர்த்த மண்டபம், கருவறை.

கோட்டீஸ்வரர் உறையும் திருவறை.

அகத்தியர் மணலால் பிடித்த லிங்கத்தின் மேல் ஒரு குவளை சார்த்தப்பட்டுள்ளது. அகத்தியருக்கு அருளியதன்படி இன்றைக்கும் சொட்டுச் சொட்டாக நீர், இந்த லிங்க பாணத்தின் மேல் விழுந்தபடி உள்ளது. ”ஈசனின் திருமேனியை எப்போது தொட்டாலும் ஜில்லென்று இருக்கும். இந்த நீர் எங்கிருந்து வந்து இப்படிக் கசிகிறது என்பது பெரும் புதிர்! இதனை பக்தர்கள் இன்றைக் கும் தரிசிக்கலாம்” என்கிறார் ஆலய அர்ச்சகர்.

இரண்டாம் பிராகாரத்தில் சொக்கநாதர்- மீனாட்சி அம்மன். மதுரை பாண்டியர்களின் காலத்தில் கட்டப்பட்ட தனிக் கோயில். ஏகப்பட்ட சேதாரத்துடன் காட்சி தருகிறது. பக்தர்கள், பாணம் இல்லாத ஆவுடையார் (பாணம் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாகர் விக்கிரகத்தை வைத்துள்ளார்கள்!) மற்றும் பின்னம் அடைந்த விக்கிரகங்கள் ஆகியவற்றை பரிதாபம் பொங்க தரிசிக்கிறோம். பெரிய தெப்பக் குளம் ஒன்றும் அமைந்துள்ளது. இதுதான் அகத்தியர் நீராடிய முனி தீர்த்தம். பொற்றாமரைக் குளம் என்று சொல்கிறார்கள். கடனா நதி, இந்த ஆலயத்தினுள் வந்து பின் வெளியே செல்கிறது.
பிராகார வலம் முடிந்ததும், ஊர்க்காட்டு மாடசுவாமியைத் தரிசிக்கிறோம். அகத்தியரால் உருவாக்கப்பட்ட பூத மனிதன் ‘ஊர்க்காட்டு மாடசுவாமி’ என்ற பெயருடன் அருள் பாலித்து வருகிறார்.

பூத மனிதன் வந்து பன்றிமுகியை சம்ஹாரம் செய்த பிறகு, அகத்தியர் உட்பட அனைவரும் மகிழ்ந்தனர். அப்போது பூத மனிதனிடம் அகத்தியர், ”பன்றிமுகி என்கிற ராட்சசியை நீ அழித்ததால், மூவுலகுமே சந்தோஷம் அடைகிறது. இந்த வனமானது உன்னால் பெருமை அடைகிறது. நீ இங்கேயே நிலைத்திருக்க வேண்டும். இந்தப் பகுதியையும் காவல் காத்து அருள வேண்டும்” என்று உத்தரவிட்டார். இதன் பின், பூத மனிதனும் இங்கேயே நிலை கொண்டார்; இன்றைக்கும் ஊர்க்காடு

கோட்டீஸ்வரர் ஆலயத்தின் பிராகாரப் பகுதியில் பூத மனிதன் இருந்து வருகிறார். அருகில் உள்ள ஆலயங்களில் ஏதேனும் விசேஷம் என்றால், பூத மனிதன் விக்கிரகத்துக்கு அருகில் இருந்து பிடிமண் எடுத்துச் செல்லும் வழக்கம் இருக்கிறது.

கோட்டீஸ்வரர் ஆலயத்தில் யாகம், ஹோமம் என்றாலும் இங்கிருந்து பிடிமண் எடுத்துச் சென்றுதான் யாகங்களை துவங்குகிறார்களாம்.

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் மாடசுவாமியை வழிபட்ட பிறகே, கோட்டீஸ்வரரைத் தரிசிக்க வேண்டுமாம். கண் திருஷ்டி, பில்லி- சூன்யம் மற்றும் சித்தப்பிரமை பிடித்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் நலம் பெறலாம் என்கின்றனர்.

மண்டபங்கள், பிராகாரங்கள், சிற்பத் தூண்கள் என்று இருந்தும், ஆலயத்தின் நிலைமை சோகமாகவே காணப்படுகிறது. ஆலயத் திருப்பணிகளும் குடமுழுக்கும் மிக மிக அவசியம் என்பதை பறைசாற்றுகின்றன கோயிலின் அவல நிலை!
விரைவில் திருப்பணிகள் நடந்து, ஊர்க்காடு
கோட்டீஸ்வரர் மீண்டும் பொலிவுற அவரது திருத்தாள் பணிவோம்!

எங்கே இருக்கிறது?

நெல்லையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஊர்க்காடு. முக்கூடலில் இருந்து சுமார் 7 கி.மீ.!

எப்படிப் போவது?

நெல்லையில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்துகளில் அம்பை என்கிற அம்பாசமுத்திரத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். அம்பையில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ மூலம் ஊர்க்காட்டை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *