அமெரிக்க வானிலை ஆராய்ச்சி துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி அளவுக்கு அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
21ஆம் நூற்றாண்டின் தலையாய பிரச்சினையாக இருந்து வருவது உலக வெப்பமயமாக்கலே. இனி வரக் கூடிய ஆண்டுகளில் உலக வெப்பநிலை வரம்பை தாண்டி செல்ல இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். அமெரிக்க வானிலை ஆராய்ச்சி துறை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி அளவுக்கு அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பதற்கு 50 சதவீத சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வெப்ப நிலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானதாக இருக்கும் என்று கருதப்பட்டாலும், வெப்பநிலை அதிகரிக்கும் வேகத்தைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். வான் மண்டலத்தில் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடிய வாயுக்கள் கடந்த 30 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்பதே இந்த வெப்பமயமாக்கலுக்கு காரணம் ஆகும்.
கடந்த 2015ஆம் ஆண்டில் உலகின் சராசரி வெப்ப அளவு 1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு முதன் முதலாக அதிகரித்தது. இத்தகைய சூழலில் தான் உலக நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரான்ஸ் தலைநகர், பாரீஸ் நகரில் ஒன்று கூடி சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். அதன்படி உலக வெப்பநிலையை 2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு குறைக்க வேண்டும் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இது மட்டுமின்றி 1.5 டிகிரி அளவுக்கு வெப்ப நிலையை குறைக்க வேண்டும் என்ற முயற்சியும் ஏற்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற மாநாட்டிலும் இந்த உறுதிமொழி குறித்து நினைவுகூரப்பட்டது. கடந்த ஆண்டு உலக வெப்ப நிலை அதிகரிப்பு என்பது 1 டிகிரி என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய 7 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச அளவாகும். இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் 1 டிகிரி அளவுக்கு வெப்பநிலை அதிகரித்தாலும் கூட, ஒட்டுமொத்த உலகையும் அது பாதிக்கும் என்பதுதான்.
கடந்த ஆண்டு தென் அமெரிக்க வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவியது. உலக வெப்பநிலை அதிகரித்திருப்பதை உணர்த்துவதாக அது அமைந்தது. அதேபோல, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வனப்பகுதிகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்திய வனப்பகுதிகளில் தீ பற்றக் கூடிய இடங்களாக 1,36,604 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் அதிகரிக்க இருக்கும் வெப்ப நிலை என்பது தற்காலிகமானது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2022ஆம் ஆண்டு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கு இடையே வெப்பநிலை என்பது 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு மேல் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதே சமயம், இதே காலகட்டத்தில் ஏதோ ஒரு ஆண்டில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக வெப்பமயமாக்கல் ஒருபுறம் இருக்க, உலகெங்கிலும் உள்ள கடல்கள் வெப்பம் நிறைந்ததாகவும், அமிலத்தன்மை வாய்ந்ததாகவும் மாறி வருகின்றன. பனிப் பாறைகள் உருகி வருவதால் கடலின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இவை எல்லாம் சேர்த்து பருவநிலை மோசமடையும் சூழல் உருவாகி வருகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1.5டிகிரி அளவு வெப்பநிலை அதிகரிக்கும்..,
அதிர்ச்சி தகவலை அளித்த அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள்..!
