தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் வெளுத்தெடுப்பதால் இளநீர், மோர், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் (மார்ச் 26), நாளையும் (மார்ச் 27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வரும் 28-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 29 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். மேலும், தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.