• Fri. Apr 26th, 2024

தமிழகத்தில் அதிமுகவிற்கு ஆதரவான அலை வீசுகின்றது – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

தைப்பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஆதரவான அலை வீசுகின்றது என்றும் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகமான இடங்களை கைப்பற்றும் என்றும், மம்சாபுரத்தில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற தொகுதியில், மம்சாபுரம் பேரூராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பு கூட்டம், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்திமான்ராஜ், மம்சாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜேஸ்குமார் முன்னிலை வகித்தனர்.

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் அதிமுக என்ற மாபெறும் இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தி கொண்டிருக்கின்றனர். எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காக உழைக்க கூடிய ஒரே இயக்கம் அண்ணா திமுகதான். அதிமுகவிற்கு மக்கள் எப்போதும் ஆதரவாகவே இருப்பார்கள்.

தைப்பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவிற்கு மிகப்பெரிய ஆதரவான அலை நிலவுகின்றது. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கினோம். தாய் வீட்டு சீதனம் போன்று பொங்கல் பரிசு தொகுப்புகளை அண்ணா திமுக அரசு வழங்கியது. ஆனால் இந்த பொங்கலுக்கு மக்களுக்கு எதுவும் கொடுக்காததால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வாக்காளர்கள் தயாராக உள்ளனர்.

எடப்பாடியார், ஓபிஎஸ் கரத்தை வலுப்படுத்த வாக்காளர்கள் தயாராக உள்ளனர். 2011-இல் புரட்சித்தலைவி அம்மாவிடம் நான் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் 8 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அறிவித்தார். அதில் மூன்று கூட்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டது. முக்கூடல் கூட்டு குடிநீர் திட்டம், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம், வல்லநாடு கூட்டு குடிநீர் திட்டம் என இந்த மூன்று கூட்டு குடிநீர் திட்டத்தை புரட்சித்தலைவி அம்மாவிடம் கேட்டு நான் வாங்கி கொடுத்துள்ளேன். அந்த உரிமையோடு உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

நம் பகுதியில் தினமும் கூட்டுக்குடிநீர் திட்டம் விநியோகம் செய்ய ஒரு நல்லவர் சேர்மனாக வர வேண்டும். அதிமுக வேட்பாளர்களை நீங்கள் வெற்றிபெற செய்ய வையுங்கள். இந்த மம்சாபுரம் பேரூராட்சியில் போட்டியிடும் 18 அதிமுக வேட்பாளர்களும் மாபெரும் வெற்றி பெறுவார்கள். உங்களோடு ஒருவனாக பணியாற்றுவார்கள். மம்சாபுரம் பேரூராட்சி அதிமுகவின் எக்கு கோட்டையாகும். மம்சாபுரம் பேருராட்சி நகராட்சியாக மாற்றும் திட்டம் என்னிடம் இருந்தது. இப்போது அண்ணா திமுக ஆட்சியில் இருந்திருந்தால் இந்த பேருராட்சியை நகராட்சியாக மாற்று இருந்திருப்பேன்.

தரமான குடிநீர், புதிய சாலைகள், சுகாதார வளாகங்கள் போன்ற அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்திட வாக்காளர்கள் அண்ணா திமுகவிற்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். ஒரு கழகத்தில் பணியாற்றும் போது சில சோதனைகளை எதிர் கொள்ளதான் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு சிலர் ஏதாவது ஒரு கட்சிக்கு ஓடி விடுகின்றனர். அண்ணா திமுக தொண்டர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அந்த இடத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி வந்து நிற்பார். அதிமுக வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று அதிமுக அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். வாக்காளர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், விவசாய அணி மாவட்ட செயலாளர் முத்தையா, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குறிஞ்சி முருகன், விருதுநகர் மாவட்ட அமைப்பு சாரா அணிச் செயலாளர் சேதுராமன், சிவகாசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கடேஷ், மம்சாபுரம் முன்னாள் பேரூராட்சி சேர்மன் பல்க்ராஜா மற்றும் மம்சாபுரம் பேரூராட்சியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *