• Sat. May 11th, 2024

பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த தமிழக சிறுமி..!

Byவிஷா

Jan 3, 2024

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பிரதமர் மோடிக்கு, ‘இந்தி படிப்பதற்கு பள்ளிக்கூடம் கட்டித்தாங்க தாத்தா’ என கோரிக்கை வைத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
நாகை வடக்குப் பொய்கைநல்லூரைச் சேர்ந்தவர் விஜயசேகரன். இவர் தமிழ்நாடு காவல்துறையில் கடலோர காவல் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவரது ஏழு வயது மகள் துவாரகா மதிவதனி. வேளாங்கண்ணியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் பிரதமர் மோடி திருச்சிக்கு வந்த நிலையில், அவரைச் சந்திக்க தனது தந்தையுடன் சென்றிருந்தார்.
அங்கு தனது கையில் பதாகை ஏந்தி அதன் மூலம் பிரதமர் மோடிக்கு இந்தி படிப்பதற்குப் பள்ளிக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். தனக்கு இந்தி படிக்க ஆசையாக இருப்பதாகவும், ஆனால் தங்கள் ஊரான நாகப்பட்டினத்தில் இந்தி படிக்க அரசு பள்ளிக்கூடங்கள் இல்லை என்பதால் இந்தி படிப்பதற்காக அரசுப் பள்ளிக்கூடம் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தனது தந்தை இடம் ஒதுக்கி தருவார், அதில் கட்டிக் கொடுத்தால் போதும் என்றும் அந்த சிறுமி கோரிக்கை விடுத்திருக்கிறார். சிறுமியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியை மையமாக வைத்து தமிழகத்தை ஆளும் திமுக, மத்தியில் அரசாளும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கும் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘இந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய வைரலாக மாறியது. ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்களைக் கொண்ட ஆடைகளை திமுகவைச் சேர்ந்தவர்களும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்களும் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில், இந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *