கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் அரசு உதவி பெறும் கல்லூரியில் தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி நடத்தும் ‘சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு’ இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இதில், சிந்து நதிக்கும் தமிழகத்தின் தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு நதிகளுக்கும் இடையிலான ஆன்மிக மற்றும் நாகரீக தொடர்பு குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்.
இதன் துவக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் வாசுகி அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சுமார் 500 கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், உலக அளவில் நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் உருவாகின. நதிகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்தன. அதேபோல், பாரதத்தின் தொன்மையான நாகரிகமும் சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது. காலப்போக்கில் சரஸ்வதி நதி அழியும்போது நாகரீகமும் மறைந்தது. ஆனால் அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ளது என்றார்.
சரஸ்வதி நதிக்கரையோரம் உருவான நாகரிகத்தில், உலகின் பிற நாகரிகங்களைப் போல கட்டுமான கலை, மக்கள் குடியிருப்பு ஆகியவை இருந்த போதும், இதன் தனித்துவமாக அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் வேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன என்றார்.





