• Tue. Sep 26th, 2023

ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாராட்டு

ByKalamegam Viswanathan

Jul 16, 2023

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) சார்பில் சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்வது குறித்த மாபெரும் கருத்தரங்கு புதுக்கோட்டையில் இன்று (ஜூலை 16) நடைபெற்றது. சுமார் 2,000 விவசாயிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மரங்கள் வளர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மரம் தங்கசாமி ஐயா பிறந்த ஊரில் காவேரி கூக்குரல் இயக்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மிளகு, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பயிர்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில் தான் வளரும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், வெப்பம் அதிகம் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சமவெளியில் மிளகு சாகுபடி செய்து அதில் நன்கு லாபமும் பார்த்து வருகின்றனர்.

விவசாயிகளாகிய உங்களால் தான் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காக்க முடியும். வெப்பமயமாதல் என்னும் பிரச்சினை உலகளவில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. அதை தடுப்பதில் மரங்கள் வளர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில், வெப்பமயமாதலுக்கு எதிரான போரில் விவசாயிகளாகிய நீங்கள் முன் களப் பணியாளர்களாக செயல்படுகிறீர்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறனின் வேண்டுகோளின்படி, சந்தன மரங்களை வளர்ப்பதிலும், அதை வெட்டுவதிலும் விவசாயிகள் சந்திக்கும் இடர்பாடுகளை நீக்குவதற்கு தமிழக முதல்வருடன் நான் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்வேன்.

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு 10 கோடி மரக்கன்றுகளை நட தமிழ்நாடு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

இவ்வாறு அவர் பேசினார்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழ்நாடு கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் பேசுகையில், “சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் வருமானத்தையும் ஒரு சேர அதிகரிப்பதற்கு மரம்சார்ந்த விவசாய முறை தான் சிறந்த தீர்வு. மரப் பயிருக்கு மாறும் விவசாயிகள் அதை அறுவடை செய்யும் போது லட்சங்களிலும் கோடிகளிலும் லாபம் எடுக்க முடியும். அதேசமயம் அறுவடை காலம் வரை அவர்கள் காத்திருக்காமல் மரம் நட ஆரம்பிக்கும் சமயத்தில் இருந்தே தொடர் வருமானம் பார்க்கும் பல்வேறு வழிமுறைகள் நாங்கள் அறிமுகப்படுத்தி வருகிறோம்.

குறிப்பாக, சமவெளியில் மரங்களுக்கு இடையே மிளகு சாகுபடி செய்வது குறித்து கடந்த 6 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறோம். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எண்ணற்ற விவசாயிகள் தற்போது மிளகு சாகுபடி செய்து வருமானம் எடுத்து வருகின்றனர். மிளகு மட்டுமல்லாது ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற நறுமணப் பயிர்களையும் மரங்களுக்கு இடையே ஊடுப் பயிராக வளர்த்து விவசாயிகள் தொடர் வருமானம் பார்க்க முடியும்.

வெற்றி விவசாயிகளிடம் இருந்து அந்த வழிமுறைகளை மற்ற விவசாயிகள் அறிந்து கொள்வதற்காகவே இப்பயிற்சி நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இதுதவிர, காய்கறிகள், மஞ்சள், வாழை, சிறுதானியங்கள், கால்நடை வளர்ப்பு என பல வழிகளில் மரம்சார்ந்த விவசாய முறையில் வருமானம் பார்க்க முடியும்.” என்றார்.

இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் வல்லுனர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமவெளியில் நறுமணப் பயிர்களை சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்று மற்ற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

குறிப்பாக, இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR – IISR) சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன், திருச்சூரைச் சேர்ந்த ஜாதிகாய் விவசாயி திருமதி. சொப்னா சிபி கல்லிங்கள், மதுரையைச் சேர்ந்த தேனீ வளர்ப்பு பயிற்சியாளர் திருமதி ஜோஸ்பின் மேரி, நிகழ்ச்சி நடந்த தோட்டத்தின் உரிமையாளரும் முன்னோடி விவசாயியுமான திரு.செந்தமிழ் செல்வன் உட்பட ஏராளமான விவசாயிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *