• Sat. Apr 27th, 2024

டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்தி விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் கடிதம்

Byவிஷா

Jan 19, 2022

டெல்லியில் நடைபெற இருக்கின்ற குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், அலங்கார ஊர்தி தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாது என்று பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறினர். இந்நிலையில், டெல்லி குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார்.

“தமிழ்நாட்டை சேர்த்து மொத்தம் 29 மாநிலங்களிடம் இருந்து பரிந்துரைகள் வந்தன. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி முதல் 3 சுற்று வரை தகுதி பெற்றது. ஆனால் இறுதியான 12 அலங்கார ஊர்திகளில் தமிழகம் தேர்வு செய்யப்படவில்லை. தமிழகத்தின் அலங்கார ஊர்தி 2017, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றிருந்தன. வல்லுநர் குழு தான் அலங்கார ஊர்தி அணிவகுப்பை தேர்வு செய்கிறது” என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *