• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

முக்கிய தகவல்களை பகிர்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர்..,

ByPrabhu Sekar

Feb 20, 2026

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாச ராஜ் முக்கிய தகவல்களை பகிர்ந்தார்.

கல்லூரி தலைவர் மாலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாச ராஜ் கலந்து கொண்டார். மேலும், 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்கள் அம்பரிஷ் மற்றும் தீபேஷ் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினர்.

விழாவின் ஒரு பகுதியாக, கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாச ராஜ், தமிழக ஜூனியர் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதேபோல், ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு சீனியர் அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மேலும், புதிய திறமையான வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிரிக்கெட் போட்டிகளின் போது விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விசிலுக்கு தனியாக தடை இல்லை என்றார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின்படி, மைதானத்திற்குள் எந்தவிதமான பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும், சிலர் விசில் உள்ளிட்ட பொருட்களை வீரர்கள் மீது எறியும் சம்பவங்கள் நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கட்டுப்பாடு அமலில் உள்ளதாகவும் விளக்கினார். இதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் மணிக்கண்டன், சிஇஓ ரக்ஷனா, முதல்வர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.