• Sun. Apr 28th, 2024

இன்றுடன் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு

Byவிஷா

Feb 22, 2024

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுபட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு இந்த உரையை தமிழில் வாசித்தார். இதற்காக சட்டப்பேரவை விதி எண்ணிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பிப்ரவரி 13 மற்றும் 14ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடத்தப்பட்டது.
பிப்ரவரி 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்த பின் உரையாற்றினார். பிப்ரவரி 19ம்தேதி 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஏராளமான புதிய அறிவிப்புகள்வெளியாகின.
பிப்ரவரி 20ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்றைய கூட்டத்தில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *