• Sat. Apr 27th, 2024

நாளை முதல் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் பதியும் திட்டம் தொடக்கம்

Byவிஷா

Feb 22, 2024

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவ, மாணவிகள் நாளை முதல் பள்ளிகளிலேயே ஆதார் விவரங்களைப் பதிவு செய்யும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி தொடங்கி வைக்க உள்ளார்.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை 23 ம் தேதி முதல் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிமனிதனின் விபரமும் ஆதார் மூலம் பதிவு செய்ய வேண்டும். பள்ளிகளில் படிக்க வரும் குழந்தைகளுக்கு ஆதார் பெறுவதற்கு சேவை மையங்களுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் எல்காட் நிறுவனம் மூலம் 23ம் தேதி முதல் பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதன்படி பள்ளி வளாகத்தில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் கட்டாய பயோ மெட்ரிக் புதுப்பிப்பை எல்காட் -ன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் தொடங்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. எல்காட் நிறுவனத்தில் 770 பதிவு ஃ அப்டேட்டிங் கிட் உள்ளன. மாவட்ட நிர்வாகங்கள் அதனை சேவையில் பயன்படுத்தலாம். எல்காட் கிளை மேலாளர்கள் பதிவு, புதுப்பித்தல் பணியை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் பிறகு அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு பள்ளிக் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் ஆதார் பதிவு, ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு இவைகளுக்காக பள்ளி மாணவர்கள் வெளியே செல்ல தேவையிருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *