கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17-ந்தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமரணத்துக்கு நீதி கேட்டு அங்குள்ளவர்கள் போராட்டம் நடத்திய போது பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் பள்ளிக்கூடம் சூறையாடப்பட்டது. பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசாரும், உளவுப்பிரிவு போலீசாரும் சரிவர செயல்படவில்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டி வந்தார். போலீசார் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் கலவரத்தை தடுத்திருக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை நேரில் சந்தித்து போலீஸ் உயர் அதிகாரிகள் மீது பரபரப்பான புகார்களை கூறி உள்ளார். அவருடன் வி.பி. துரைசாமி, கே.பி.ராமலிங்கம், முருகானந்தம், கார்த்தியாயினி, டாக்டர் சரவணன், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் உடன் சென்றனர். மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது.