புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர்.
கடந்த 18-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில் பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார். 15 பேரின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. திரௌபதி முர்மு 3,78,000 வாக்கு மதிப்பும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்கு மதிப்பும் பெற்றுள்ளனர். எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். இதன்மூலம் திரவுபதி முர்மு 2,32,400 வாக்கு மதிப்பு முன்னிலையில் இருக்கிறார்.