வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு கட்சி தலைவர்களும் மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, வடிகால்களை தூர்வாருவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு துரிதமாக ஈடுபடவில்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். மேலும், கொளத்தூர் தொகுதியில் பாதிப்பை கண்டறியவே படகில் சென்றேன். அது தொடர்பான விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை” என்று தெரிவித்தார்.