மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் உப கோவிலான தெப்பக்குளம் அருள்மிகு முக்தீஸ்வரர் கோவில் கருவறையில் சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது விழும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
சூரியக்கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் படருவதை சூரிய பூஜை என்று பக்தர்கள் பரவசத்துடன் குறிப்பிட்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
மதுரையிலுள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகவும், இந்திரனின் வாகனமான ஐராவதம் எனும் வெள்ளை யானை சாபவிமோசனம் பெற்ற ஸ்தலமாகவும் கருதப்படும் அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் மார்ச் 2-வது வாரம் காலை நேரத்தில் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக சூரியக்கதிர்கள் ஊடுருவுகின்றன. பின்பு 2-வது முறையாக செப்டம்பர் 3-வது, 4-வது வாரங்களில் கருவறையில் சூரிய ஒளிபடும் நிகழ்வு வன வருடத்தில் இரண்டு முறை நடைபெறுகிறது.
முதலில் மஞ்சள் நிறத்திலும், பின்பு கண்கள் கூசும் வகையில் வெள்ளொளியாகவும் தெரியும் இந்த சூரிய பூஜையின் 15 நிமிட இடைவெளியின் போது கோவில் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் செய்யப்படுகிறது
மேலும், சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழி பட்டபாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் தற்போது மூலவர் சிவனை நோக்கி சூரியக்கதிர்கள் விழத்தொடங்கியுள்ள இந்த அபூர்வ நிகழ்வை பக்தர்கள் ஏராளமானோர் தரிசித்து வருகின்றனர்.