மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அய்யனார்கோவில் அணை அப்பகுதியில் உள்ள எம்.கல்லுப்பட்டி, எம்.பெருமாள்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலையிலும் அமைந்துள்ளது.
இந்த அணையின் மதகு பகுதிகள் சிதிலமடைந்து காணப்படும் நிலையில் மதகு பகுதியை சரி செய்ய கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்., இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர் வரத்து பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கும் சூழலில் அணையின் மதகு சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
அணைக்கு வரும் நீர் சிதிலமடைந்த மதகு வழியாக வெளியேறி வருவதையும், மதகு பகுதியை சரி செய்து அணையில் நீரை சேமிக்க வலியுறுத்தி 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தற்போது மீண்டும் தொடர் கோரிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கோரிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்காத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து இன்று எம்.கல்லுப்பட்டியில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலிசார் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது.








