மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து அலங்காநல்லூர், அழகர்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் அரசு பேருந்துகள், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வராததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், பேருந்து வராதது குறித்துப் போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதிலளிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் பள்ளி மாணவர்கள் வாடிப்பட்டி மதுரை செல்லும் முக்கிய சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்கு செலுத்திய நிலையில், தற்போதைய ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை” என்றும், “இலவச பேருந்து பயணம் என்ற பெயரில் பெண்களை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் இழிவாகப் பேசுகின்றனர்” என்றும் அரசு பேருந்தும் சரியாக இயக்கப்படுவதில்லை என பெண்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

பயணிகளுடன் அமர்ந்து 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாடிப்பட்டி காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி முறையாக பேருந்துகளை அனுப்ப வேண்டும் இல்லையென்றால் இலவச பேருந்துகளை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து பெண்கள் கோஷங்களை எழுப்பினர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பேருந்து வராததால் பெண்கள் பயணிகள் சாலை மறியல் செய்த சம்பவம் வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




