கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திண்டுக்கல் திரும்பியபோது, திடீர் உடல்நலக்குறைவால் காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் ராஜகுரு (HC 2244). இவர், கைதிகளை மதுரை மத்திய சிறையிலிருந்து அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் சிறையில் ஒப்படைக்கும் வழிகாவல் (Escort) பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்தப் பணி முழுமையாக முடிந்ததும், திண்டுக்கல் திரும்புவதற்காக மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு அவர் வந்திருந்தார். அப்போது அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடன் இருந்த சக காவலர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ராஜகுரு ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பணி முடிந்து ஊர் திரும்பும் வழியில் காவலர் உயிரிழந்த இச்சம்பவம் சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கரிமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.