கோவை புறநகர் பகுதியான சேலம் – கொச்சின் L&T பைபாஸ் சாலையில், நேற்று மாலை பேருந்து மீது கார் மோதிய கோர விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த 56 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் அம்மபாளையம், ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிகுமார் (56). இவரது மனைவி கிருஷ்ணவேணி (60) மற்றும் மகன் அதிஷ்யா (23). இவர்கள் குடும்பத்தினருடன் கேரள மாநிலம் திருச்சூருக்குச் சென்று விட்டு, நேற்று மாலை காரில் மீண்டும் திருப்பூர் நோக்கித் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
மாலை சுமார் 4:00 மணி அளவில், கோவை சேலம் – கொச்சின் L&T பைபாஸ் சாலையில் உள்ள ஹரியானா தாபா (Haryana Dhaba) அருகே கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்திசையில் ஆம்னி பேருந்து மீது இவர்களது கார் எதிர்பாராத விதமாக பயங்கரமாக மோதியது.
இந்த கோர மோதலில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் பயணித்த ரவிகுமார் (56) தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடினார். அவரது மனைவி கிருஷ்ணவேணி (60) பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ரவிகுமார் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்த கிருஷ்ணவேணிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து உயிரிழந்த ரவிகுமாரின் மகன் அதிஷ்யா (23) அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
அதிவேகமா ? அல்லது கவனக்குறைவா ? என விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.