

அதிக சவாலான இம்மருத்துவ செயல்முறை சென்னையை தவிர்த்த தமிழ்நாட்டில் செய்யப்படுவது இதுவே முதன்முறை
*மதுரை, 58 வயதான ஒரு பெண்மணியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மித்ராகிளிப் செயல்முறை என அழைக்கப்படும் ஒரு புதுமையான அணுகுமுறை உத்தியை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் (MMHRC) மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக பயன்படுத்தியிருக்கிறது. சென்னையைத் தவிர்த்த தமிழ்நாட்டின் பிற பகுதியில் முதன்முறையாக இந்த செயல்முறை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நோயாளிக்கு non-ischemic dilated Cardiomyopathy with severe secondary Mitral Regurgitation (MR) என்ற பிரச்சனை இருந்தது. இதய செயலிழப்புக்காக CRT-D சிகிச்சையும் இவருக்கு செய்யப்பட்டிருந்தது. இப்பெண்ணின் இதய பிரச்சனைகள் காரணமாக திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை பொருத்தமான விருப்பத்தேர்வாக இருக்கவில்லை.
Mitral Regurgitation (MR) என்பது, ஒரு வகை இதய வால்வு நோயாகும்; இடதுபக்க இதய அறைகளுக்கு இடையில் உள்ள வால்வு முழுமையாக மூடாத நிலையில் இருப்பதால் வால்வின் பின்னோக்கி இரத்தம் கசியும் பிரச்சனை இதில் இருக்கிறது. இந்த கசிவு கடுமையானதாக இருக்குமானால், போதுமான அளவு இரத்தம் இதயத்தின் வழியாக அல்லது உடலின் எஞ்சிய பகுதிகளுக்கு செல்லாது. இதயத்தின் இடது மேலறைக்குள்ளும் மற்றும் நுரையீரல்களுக்குள்ளும் பின்னோக்கி இரத்தம் கசிவதை இது உருவாக்கும்; இதனால், இதய செயலிழப்பும் மற்றும் நுரையீரல் அடைப்பும் ஏற்படும்; இதற்கும் கூடுதலாக உயிரிழப்பு கூட நேரலாம்.
MMHRC-யின் இருதய நுண்துளை முதுநிலை சிகிச்சை நிபுணர் டாக்டர். R. சிவகுமார் கூறியதாவது: “கடுமையான Mitral Regurgitation (MR) நிலையால் அவதியுறும் மற்றும் வேறுபிற விருப்பத்தேர்வுகள் இல்லாத நோயாளிகளுக்கு பயன்படுத்தக்கூடிய இந்த புதுமையான மருத்துவ செயல்முறையை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். பெரிய அளவிலான அறுவைசிகிச்சை இல்லாமலேயே உயிருக்கு ஆபத்தான பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க ஒரு பாதுகாப்பான, திறன்மிக்க வழிமுறையை இது வழங்குவதால் இதயவியல் சிகிச்சையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவதாக மிட்ராகிளிப் இருக்கிறது.” இப்பெண்மணிக்கு செய்யப்பட்ட இப்புதுமையான சிகிச்சை செயல்முறை குறித்து பேசுகையில், “அப்பெண்ணின் வலது தொடையில் உள்ள சிரை வழியாக ஒரு 3DTEE உதவியுடன் ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் ஏட்ரிய இடைச்சுவரில் துளையிடப்பட்டது; சாத்தியமுள்ள சிறந்த நிலையில் மிட்ரல் வால்வின் இரண்டு இதழ்களை பிடித்து மிட்ராகிளிப் இதயத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த வெற்றிகர சிகிச்சை உத்தியின் வழியாக கிரேடு 5-ல் இருந்த MR கிரேடு 1 என குறைந்தது. படிப்படியாக பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்த இவர் நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்,” என்று அவர் மேலும் கூறினார்.
MMHRC-யின் இதயவியல் துறையின் தலைவர் டாக்டர். N. கணேசன், இப்புதிய சிகிச்சைமுறை அறிமுகம் குறித்து கூறியதாவது: “தென்தமிழ்நாட்டிலும் மற்றும் அதைக் கடந்தும் உள்ள பல நபர்களின் வாழ்க்கையை இந்த நவீன செயல்முறை சிறப்பாக மேம்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதயத்தில் இரத்தக்கசிவுள்ள மிட்ரல் வால்வை சரிசெய்ய அறுவைசிகிச்சை அல்லாத, குறைவான ஊடுருவல் போன்ற ஒரு மாற்று வழிமுறையை மிட்ராகிளிப் வழங்குகிறது. 2 முதல் 3 நாட்கள் வரை இச்சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்குவது போதுமானது. சிகிச்சை முடிந்த ஒரு வாரத்திற்குள் நோயாளிகள் அவர்களது இயல்பான செயல்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளலாம். இந்த மருத்துவ செயல்முறைக்கு முன்னதாக, இதயவியல் நிபுணர் மற்றும் அறுவைசிகிச்சை வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவால் அறுவைசிகிச்சைக்கான விருப்பத்தேர்வுகள் பற்றி விரிவாக பரிசீலிக்கப்பட்டது. இந்நோயாளியின் பாதிப்புகளும் மற்றும் எழக்கூடிய சிக்கல்களும் விரிவாக விவாதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மிட்ராகிளிப் மருத்துவ செயல்முறைக்கு அவசியமான ஏற்பாடுகள் பொருந்தும் வகையில் செய்யப்பட்டன.”
MMHRC-யின் இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். S. செல்வமணி, இந்நோயாளியின் பாதிப்புநிலை குறித்து பேசுகையில், “மிட்ராகிளிப் செயல்முறை மேற்கொள்ளப்பட்ட இந்நோயாளி, கடுமையான Mitral Regurgitation (MR) பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது தினசரி செயல்பாடுகள் மற்றும் வாழ்க்கை தரம் மீது கடுமையான கட்டுப்பாடுகளையும், பாதிப்புகளையும் இது ஏற்படுத்தியிருந்தது. புரட்சிகரமான மிட்ராகிளிப் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்நோயாளியின் மிட்ரல் வால்வை எங்களால் வெற்றிகரமாக சரிசெய்ய முடிந்தது. இதன் மூலம் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
MMHRC-யின் முதுநிலை நிபுணர் டாக்டர். M. சம்பத் பேசுகையில், “3D உணவுக்குழாய் வழி இதய எதிரொலி வரைபடப் பரிசோதனை, பைபிளேன், x-பிளேன் ஆகியவை இச்செயல்முறையில் மிக முக்கிய பங்கு வகித்தன. இந்த சிகிச்சை உத்தியானது 3D TEE மீது முற்றிலும் சார்ந்ததாகும். இது முற்றிலுமாக மிகச்சரியாக செய்யப்பட்டதால் சிறப்பான சிகிச்சை விளைவுகள் இந்த செய்முறையில் கிடைத்திருக்கின்றன,” என்று குறிப்பிட்டார்.
MMHRC-யின் இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். P. ஜெயபாண்டியன் கூறியதாவது: “இந்நோயாளிக்கு ஏற்பட்ட இதய செயலிழப்புக்காக CRT-D சிகிச்சை கூட செய்யப்பட்டது. இதய செயலிழப்பை சரிசெய்வதற்கான உரிய செயல்முறைகள் இவருக்கு செய்யப்பட்ட போதிலும்கூட மிட்ரல் வால்வில் பின்னோக்கிய இரத்தக்கசிவு இருந்ததன் காரணமாக இந்நோயாளிக்கு செய்யப்பட்ட மிட்ராகிளிப் செயல்முறை வெற்றிகரமாக இருந்திருக்கிறது.”
இதய மயக்கமருந்தியல் துறை தலைவர் டாக்டர். S. குமார் பேசுகையில், “பல்வேறு சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவால் திட்டமிடப்பட்ட இந்த துல்லியமான சிகிச்சை திட்டம் நோயாளிக்கு சிறப்பான விளைவுகளை தந்திருக்கிறது. மயக்கமருந்தின் கீழ் செய்யப்பட்ட, சிக்கல் ஏதும் இல்லாத இம்மருத்துவ செயல்முறையை செய்து முடிக்க சில மணிநேரங்கள் ஆனது. இச்செயல்முறைக்கு பிறகு அவரது அறிகுறிகளில் கணிசமான முன்னேற்றம் தென்பட்டது, அதைத் தொடர்ந்து 3 நாட்களில் அவர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆரோக்கியமான மற்றும் அதிக நிறைவான வாழ்க்கையை மீண்டும் தொடங்கும் பாதையில் இப்போது அவர் பயணிக்க தொடங்கியிருக்கிறார். அறுவைசிகிச்சைக்கு அதிக இடர்வாய்ப்பு இந்நோயாளிக்கு இருந்ததால் ஊடுருவல் அல்லாத மருத்துவ செயல்முறையும், மிட்ராகிளிப் உத்தியும் இச்சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டன,” என்று கூறினார்.
இதய அறுவைசிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் R.M கிருஷ்ணன் மற்றும் இத்துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். M. ராஜன் ஆகியோர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,” கடுமையான மிட்ரல் வால்வில் பின்னோக்கிய இரத்தக்கசிவுக்கான சிகிச்சையில் பெருமிதப்படக்கூடிய ஒரு முன்னேற்ற நடவடிக்கை இன்றைய நாளில் சாத்தியமாகியிருக்கிறது. MMHRC-யில் மிட்ராகிளிப் செயல்முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருப்பது மருத்துவ மேம்பாடுகளில் தொடர்ந்து முன்னணியில் இருக்க வேண்டும் என்ற எமது மருத்துவமனையின் உறுதிப்பாட்டை நேர்த்தியாக வெளிப்படுத்துகிறது. நோயாளிகளுக்கு கிடைக்கும் சிறந்த சிகிச்சை விளைவுகளை மேலும் மேம்படுத்துவது எங்களது அர்ப்பணிப்புக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று குறிப்பிட்டனர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வின்போது , மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மற்றும் குடல் இரைப்பை அறுவைசிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். ரமேஷ் அர்த்தனாரி மற்றும் மருத்துவ நிர்வாகி டாக்டர். B. கண்ணன் அவர்களும் கலந்துகொண்டார்.
