100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வைக்கப்பட்ட பதாகையில், மாணவர்கள் “My Vote.. TVK” என எழுதி தங்களது அரசியல் பாசத்தை வெளிப்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னர் கல்லூரியில், தேர்தல் ஆணையம் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் முன்னிலையில் தேர்தல் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பிரமாண்ட விழிப்புணர்வு ப்ளக்ஸ் பேனரில் கையெழுத்திடும் இயக்கம் தொடங்கியது.

கலெக்டர் கையெழுத்திட்டுச் சென்றதைத் தொடர்ந்து, வரிசையாக வந்த மாணவர்கள் உற்சாகமாக கையெழுத்திட்டனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, ஒரு சில மாணவர்கள் பள்க்ஸின் மையத்தில் தங்கள் கையெழுத்துடன்” TVK” என எழுதி, தங்களது தளபதி விஜய் மீதான விசுவாசத்தைக் காட்டினர்.
அரசு நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி, கண் இமைக்கும் நேரத்தில் கட்சிப் பிரச்சாரக் களமாக மாறியதைக் கண்ட அதிகாரிகள் திகைத்துப் போயினர்.

அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வைரலானது.
தேர்தல் விழிப்புணர்வு மேடையிலேயே மாணவர்கள் காட்டிய இந்த அரசியல் அதிரடி புதுக்கோட்டை வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.




