• Mon. Apr 21st, 2025

இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற மாணவர்கள் பலி

ByR. Vijay

Apr 1, 2025

நாகையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று சுவற்றில் மோதியதில் இரண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த மாணவர்கள் புகைப்படம், காவல் நிலையம், அக்கரைப்பேட்டை பாலம்

நாகை ஆரியநாட்டுத்தெரு பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவரின் மகன் நிவேந்தன், கல்யாண சுந்தரம் மகன் பாலமுருகன் ஆகியோர் நாகையில் உள்ள இருவேறு தனியார் கல்லூரிகளில் பொறியியல் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டையில் இருந்து ஆரியநாட்டு தெருவிற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அக்கரைப்பேட்டை பாலத்தில் இருந்து அதிவேகமாக வந்தவர்கள் நிலை தடுமாறி ரயில்வே நிலையத்திற்கு செல்லும் சாலையின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானார்கள். விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டப் பொதுமக்கள் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு சிகிச்சை பலனின்றி நிவேந்தன் உயிரிழந்ததை அடுத்து பாலமுருகன் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த பாலமுருகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் நாகை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.