



நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மாடர்ன் ஆட்டோ மொபைல் என்ற கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழக அரசின் மாவட்ட தொழில் மையத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து அந்த கடனுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மானியம் பெறுவதற்கு ஒரு சதவீதமாக தனக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தொழில் வணிகத்துறை உதவி இயக்குநர் அன்பழகன் நிர்பந்தம் செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து புகார் கொடுக்க முடிவு செய்த சதீஷ்குமார் நாகை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரை பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய பணத்தை சதீஷ்குமாரிடம் கொடுத்து அனுப்பினர்.
அதனை தொடர்ந்து இன்று காலை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சதீஷ்குமார் இடமிருந்து ரசாயனம் தடவிய பணத்தை அன்பழகன் வாங்கும்போது அவரை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை மயிலாடுதுறை டிஎஸ்பி மனோகரன், நாகை ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான 9 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிடிப்பட்ட உதவி இயக்குநர் அன்பழகனிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்த போலீசார், உதவி இயக்குநர் அன்பழகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாகையில் கடனுக்கு மானியம் பெறுவதற்கு பயனாளியிடம் 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரிடம் இருந்த 1 லட்சத்து ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


