விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புனித தனிசுலாஸ் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளி கடந்த 1945ம் ஆண்டு புனித மாண்ட் போர்டு சபை சகோதரர்கள் தொடக்கப்பள்ளியாக அரசு உதவி பெறும் பள்ளியாக தொடங்கப்பட்டது.
கடந்த 80 ஆண்டுகளில் இருபாலர் பயிலும் தொடக்கப்பள்ளியாக தொடங்கி உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என மாபெரும் வளர்ச்சியடைந்தது. இதனுடன் ஆசிரியர் பயிற்சி கல்லூரியும் இணைந்து செயல்பட்டது.
ஆரம்ப கால கட்டங்களில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வந்தனர்.

காலச் சூழ்நிலையாலும் மாறிவரும் கல்வி வளர்ச்சியாலும் காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இதனை தொடர்ந்து இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றினைந்து மீண்டும் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும், அதற்கு நிர்வாகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த நடவடிக்கைக்கு எந்தவிதமான உதவியும் செய்வதற்கு முன்னாள் மாணவர்கள் என்ற முறையில் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒரு காலத்தில் சாத்தூர் சுற்றுவட்டாரத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்த மிகவும் பிரபலமான மைதானமாக இருந்தது. பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சாத்தூர் பகுதியிலுள்ள இளைஞர்கள் தங்கள் உடல்திறனை மேம்படுத்த பயிற்சி பெற்று வந்தனர்.

ஆனால் தற்போது புதர்மண்டி கிடப்பது போல காட்சியளித்து மனதிற்கு வருத்தமளிப்பதாகவும், அதனை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி ஜோசப் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் சகோதரர் மற்றும் முன்னாள் ஆசிரியர் பிரபாகர், முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






