புதுச்சேரி நகர பகுதியான புஸ்சி வீதியில் ஜெயராணி அரசு நிதி உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நடைபெறும் இந்த பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்தனர்.
தற்போது இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து 150 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இந்த பள்ளியை மூடுவதற்கு அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதனை அடுத்து அந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கையையும் பள்ளி நிர்வாகம் கைவிட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளியை மூடும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தியும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு மற்றும் சமூக அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக ஈடுபட்டு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெறவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பள்ளியை தொடர்ந்து நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.