குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் உள்ள தாழம்விளை சாலை 30 ஆண்டுகளாக மெதுகும்மல் பேரூராட்சியால் போடப்பட்டு, தற்போது கான்க்ரீட் சாலையாக மாற்றி தெரு விளக்குக்ள மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு, மற்றும் குடிநீர் குழாய்கள் மூலமாக குடிநீர் விநியோகம் என செயல்பட்டு வரும் பகுதி.
இப்பகுதி வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் களியக்காவிளை, கொல்லங்கோடு, மங்காடு பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள சரோஜா என்ற பெண் இந்த சாலை கடந்து செல்லும் தாழாம்விளை பகுதியில் தங்களுக்கு சொந்தமான நிலம் இருப்பதாக கூறி சாலையின் குறுக்கே சிமென்று கற்களால் சுவர் கட்டி மறைத்துள்ளார்.
இதனால் இப்பகிகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தி வந்த நிலையில், சரோஜாவின் உறவினர் சுசீலா ( 60) உடல் நலக்குறைவால் காலமானார். இதை தொடர்ந்து சரோஜா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் சுசீலாவின் உடலை சாலையின் நடுவில் அடக்கம் செய்ய முயற்சி மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து தகவல் அறிந்த அப்பகுதி பொது மக்கள் சாலையில் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் திரண்டனர். ஆனால் சரோஜா சாலைக்கு உரிமை கொண்டாடி பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் சரோஜாவின் குடும்ப மயானத்தில் உடலை அடக்கம் செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தக்கலை DSP கணேசன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சரோஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சரோஜா ஒரே பிடிவாதமாக சாலையில் தான் சுசீலா உடலை அடக்கம் செய்வேன் என்று தன்னிலை மாற்றாமல் இருந்ததால் காவல்துறை மத்தியிலும் குழப்பம் நீடித்தது.
தொடர்ந்து DSP தலைமையில் காவல்துறை முன்னிலையில் இறந்த சுசீலாவின் உடலை அவரது குடும்ப கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையின் குறுக்கே வழி மறித்து சரோஜா கட்டிய சுவரை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.