• Thu. Mar 28th, 2024

முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும் – மலாலா

இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள பல்கலைக்கழக அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப்பை எடுத்துவிட்டு வகுப்பறைக்குள் அமர வேண்டும் என நிர்வாகம் விடுத்த கோரிக்கையை மாணவிகள் நிராகரித்தனர்.

மாணவிகளின் மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து வகுப்பறைக்குள் வந்தனர். இது அடுத்தடுத்து மிகப்பெரிய போராட்டமாக உருவானது. இந்நிலையில், நேற்று இரு தரப்பு மாணவர்களுக்குமிடையே மோதல் உருவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்கள் வீசி தாக்கிக்கொண்டனர்.
பாகல்கோட், தவனகிரி, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில், போராட்டங்கள் நடைபெற்றன. தவனகிரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

கர்நாடகாவின் மாண்டியாவில், ஹிஜாப் அணிந்தவாறு கல்லூரிக்கு வந்த மாணவியை சூழ்ந்து கொண்டு, காவித்துண்டு அணிந்து வந்த மாணவர்கள் கோஷம் எழுப்பினர். எனினும், துணிச்சலாக எதிர்த்து நின்ற அந்த மாணவி, ஹிஜாப் அணிவது எனது உரிமை என உரக்கக் கூறியவாறு எதிர் கோஷம் எழுப்பினார். இதையடுத்து, மாணவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷம் எழுப்ப, அந்த மாணவி பதிலுக்கு அல்லாஹூ அக்பர் என கோஷம் எழுப்பினார். உடனடியாக அங்கு வந்த பள்ளி நிர்வாகிகள், மாணவியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். துணிச்சலை வெளிப்படுத்திய அந்த மாணவிக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கர்நாடகாவில் மாணவர்கள் மற்றும் மத அமைப்புகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவதை அடுத்து, அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வர அனுமதி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. சட்டப்படியே இந்த விவகாரம் அணுகப்படும் என்றும் உணர்வுப்பூர்வமாக அல்ல என்றும் தெரிவித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அரசியல் சாசனப்படியே தீர்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டது.

அரசியல் சாசனம்தான் தங்களுக்கு பகவத் கீதை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும் என்றும் சட்டம் ஒழுங்கிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. இந்நிலையில், இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *