திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளார் ஐ.பெரியசாமி கிராமம் கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அதன்படி சின்னாளபட்டியில் சேவா சங்கம், அண்ணாசிலை, சிக்கனம்பட்டி, கீழக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்தபோது பெண்கள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசிய போது கூறியதாவது:

சின்னாளபட்டி எனக்கு தாய்வீடு போல. என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் சின்னாளபட்டி கைத்தறி நெசவாளர்கள். உயிருள்ளவரை சின்னாளபட்டி மக்களை என்றும் மறக்க மாட்டேன்.
கலர் டி.வி, எரிவாயு அடுப்பு போன்ற தரமான பொருட்களை தமிழக மக்களுக்கு வழங்கிய முன்னாள் முதல்வர் கருணாநிதி வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய் ரூ. 8 ஆயிரத்திற்கான கூப்பன்களை வழங்கி அதை பெண்களே தங்களுக்கு விருப்பமான கடைகளில் விருப்பமான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீங்கள் ஏப்ரல் 23-ம் தேதி உதயசூரியனுக்கு வாக்களித்த பின்பு மே 10-ம் தேதி உங்கள் இல்லம் தேடி ரூ. 8 ஆயிரத்திற்கான கூப்பன் வருவதோடு, உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 2 ஆயிரம் கிடைக்கப் போகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கி எப்படி பெண்களை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்தாரோ, அதுபோல மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்கப்போகும் மு.க.ஸ்டாலின் அனைத்து தொழில், அனைத்து வேலைகளிலும் பெண்கள் அதிக அளவில் வர வேண்டும் என்பதற்காக பெண்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சின்னாளபட்டிக்கு கருணாநிதி ஆட்சி காலத்தில் எப்படி நிலக்கோட்டை பேரணையில் இருந்து குடி தண்ணீர் கொண்டுவந்தோமோ, அதுபோல அவர் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் ஆட்சியில் வைகை அணையிலிருந்து ரூ. 750 கோடி மூலம் குழாய் மூலம் குடி தண்ணீர் கொண்டுவரப்பட்டு சின்னாளபட்டி மக்களுக்கு வைகை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து தரப்பு மக்கள் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
உடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.




