கோவையில் நடைபெற்ற, மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாற்றுத்திறனாளி வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோவையில் மாநில அளவில் மாற்றுத்திறனளிகளுக்கான அமர்வு கைப்பந்து போட்டி, சிவவிலாஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஐயப்பா நெய் சார்பில், காளப்பட்டி குணா ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக கோயம்புத்தூர், பாரா வாலிபால் சங்கம் சார்பாக நடைபெற்ற இதில்,கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, விருதுநகர், திருப்பூர், ராமநாதபுரம் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
லீக் சுற்றுகளாக நடைபெற்ற இறுதி போட்டியில் கோவை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய அணிகள் மோதின. இதில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு செட்களிலும் தலா ஒரு அணி வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில், கோவை வீரர்கள் அபாரமாக விளையாடி, 25 – 21 என்ற கணக்கில் வென்று, கோப்பையை தட்டி சென்றனர். இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் சிவ விலாஸ் நிறுவன தலைவர் முருகானந்தம் பாண்டியன், ஐயப்பா நெய் நிறுவன தலைவர் கிரீசன் மற்றும் சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோவன் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீர்ர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.