

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆகவேண்டும் என ஆசை இருக்கிறது என அண்ணாமலை பேச்சு
தமிழக பாஜக சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: “கடந்த எட்டு ஆண்டுகளில் பாஜகவினர் போல எந்த கட்சியினரும் கடின உழைப்பை வெளிப்படுத்தியது கிடையாது. 2014 லோக்சபா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, பாஜக ஆட்சி அமைத்தது.ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டு உள்ளார். இது, பாஜகவின் சிறப்பான சமூக நீதி கொள்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
பாஜக கொள்கைகளுக்கு ஒத்துப்போகாத பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூட, திரௌபதி முர்மு-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.ஆனால், சமூக நீதி பற்றி பேசும் தலைவர்கள் அதை பின்பற்றுவதில்லை. அந்த வகையில், திருமாவளவன் போன்றவர்கள் கண்ணாடி முன் நின்று தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழக மக்களை திமுக அரசு குழப்பி வருகிறது. ஜனாதிபதி வேட்பாளராக ஒரு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்மணி அறிவிக்கப்பட்ட உடன், முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது.
சமூக நீதி பற்றி பேசும் அவருக்கு பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க தைரியம் இருக்கிறதா..? தனிமனிதனுக்கு சுய மரியாதை ஏற்படுத்தி தந்தது மோடி அரசு. ஊழல் நாடாக இருந்த இந்தியாவை, பதவி ஏற்ற பின் சாதனை நாடாக மாற்றி காட்டியவர் நரேந்திர மோடி.
புலியை பார்த்து பூனை சூடு போட்டது போல, ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல; அதாவது, ‘குட்டி மோடி’ போல ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு மோடி போல கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையாக மக்கள் சேவையாற்ற வேண்டும்.திமுகவைப் பொறுத்தவரை கட்சிதான் குடும்பம்; குடும்பம் தான் கட்சி. இப்படிப்பட்ட சூழலில் மோடி போல வரவேண்டும் என்று நினைப்பது சாத்தியமில்லை.பிரதமர், ‘ஆப்பரேஷன் கங்கா’ என்ற பெயரில் திட்டங்களை வகுத்து வந்தார். தமிழகத்தில், ‘ஆப்பரேஷன் கஞ்சா’ என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் இருந்து பாஜகவுக்கு 25 எம்பிக்கள் கிடைக்கப் போவது உறுதி. நிச்சயம் அந்த மாற்றம் நடக்கும். தமிழகத்தில் தாமரை மலரும். இந்த மண்ணில் என்றென்றும் பாஜக ஆட்சி தொடரும்” என்று அண்ணாமலை பேசினார்.