கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பல்வேறு தூய்மை பணியாளர்கள், தோட்ட பணியாளர்கள், ஓட்டுநர்கள், உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் இன்று திடீரென பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜூலை மாதம், ஒவ்வொரு தொழிலாளர்களின், சம்பள பணத்திலும், ஆயிரம் முதல் 3000 வரை, பல்கலைக்கழக நிர்வாகம் இ.எஸ்.ஐ, பி.எப் என கூறி பண பிடித்தம் செய்துள்ளது. இந்த மாதம் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலும் சம்பள தொகையிலிருந்து பணபிடித்தம் செய்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை தொழிலாளர் பங்களிப்பு தொகை என பணப்பிடித்தம் செய்து, சட்ட விரோத செயல்களை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகின்றது. இது சட்டத்திற்கு புறம்பான செயல் இவ்வாறு, செய்யக்கூடாது என்று இஎஸ்ஐ துணை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் இதுகுறித்து பல்கலைக்கழக டெலிபோன் ஆப்ரேட்டரான மோகன்ராஜ் என்பவரிடம், தகவல் தெரிவித்தும், அந்த தகவலை மறைத்து, மோகன்ராஜ் தொடர்ந்து தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை பிடித்து வருகிறார்.

இதற்கு உறுதுணையாக பதிவாளரும் செயல்பட்டு வருகிறார். கடந்த 11.08.2027 அன்று நடத்தப்பட்ட குறை தீர்ப்பு கூட்டத்தில் அனைத்து தற்காலிக தொழிலாளர்கள் முன்னிலையில், பதிவாளர் அவர்கள், இதுவரை தொழிலாளர்களிடம், முறையின்றி பிடித்த தொகையை திரும்ப தருவதாக உறுதி அளித்தார். மேலும் இனி தொழிலாளர்களிடம் பணபிடித்தம் செய்ய படாது என்றும் உறுதி கூறினார். ஆனால் இன்று வரை அவர் கூறியவாறு, பிடித்தம் செய்ய பட்ட தொகை திருப்ப வழங்கப்படவில்லை,
இனிமேல் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தில் இருந்து பணப்பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று உறுதியளித்த வார்த்தையும் நிறைவேற்றப்படவில்லை, இவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இரண்டு வருட பொங்கல் போனஸ் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும், இ.எஸ்ஐ, பி.எப் பிடித்தம் செய்வது முறையாக அமல்படுத்தபட வேண்டும், ஓட்டுநர்களின் இரண்டு மாத நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தப்பட வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ளவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்,

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட வேண்டும், தொழிலாளிகளுக்கு அடையாள அட்டை, சம்பள கடிதம் உள்ளிட்டவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஆண் தூய்மை தொழிலாளர்களை நியமிக்க விட வேண்டும், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வழங்குதல், உள்ளிட்ட எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் தொழிலாளர்களின் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும், மோகன்ராஜ் என்பவரை உடனடியாக பணி மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும், என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்த உள்ளிருப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றதாக தெரிவித்தார். இந்த போராட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








