இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்பட்ட எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை மீட்க இலங்கை அரசு இந்தியாவுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இலங்கையின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள திரிகோணமலையில் 2ம் உலகப்போர் காலத்தை சேர்ந்த 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளன.
இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை லங்கா எண்ணெய் நிறுவனம் 2003ம் ஆண்டு முதல் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு 35 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்தது. இதற்காக, இந்்திய எண்ணெய் நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.75 லட்சம் குத்தகை கட்டணம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் இந்தியாவிடம் இருந்து திரும்ப பெற முடிவு செய்துள்ள இலங்கை அரசு, அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை எரிசக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘திரிகோணமலை துறைமுகத்தில் இந்தியாவுக்கு குத்தகைக்கு விடப்பட்ட 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை மீண்டும் திரும்ப பெற இந்திய அரசுடன் நடத்துவரும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சேமிப்பு கிடங்குகளை பராமரிக்க இலங்கை எண்ணெய் நிறுவனம் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளது. விரைவில் சாதகமான பதில் இந்தியாவிடம் இருந்து கிடைக்கும்,’ என தெரிவித்துள்ளார்.