• Sat. Apr 20th, 2024

வீழ்ச்சியில் மிதக்கும் இலங்கை…எப்போது இதற்கு முடிவு..!

Byகாயத்ரி

Jan 24, 2022

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்ன? ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது? இலங்கை அரசே முழுக்குப்போடும் அளவிற்கு சரிவு பெற அப்படி என்ன ஏற்பட்டது…இத்தொகுப்பில் ஒரு அலசல்…!

இலங்கையின் இந்த நிலைக்குக் காரணம் கொரோனா என்றே அரசுத்தரப்பிலும் பொதுவாகவும் கூறப்படுகிறது. அது உண்மை என்றாலும்கூட அது மட்டுமே காரணம் அல்ல! கொரோனா தாக்கத்தால் இலங்கைப் பொருளாதாரத்தின் முதன்மைப் பங்கு சக்தியும், அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் முக்கியத்துறையுமான சுற்றுலாத்துறை முற்றிலுமாக முடங்கிப்போனது. விமான, கப்பல் போக்குவரத்தும் பெருமளவு குறைந்தது.

எல்லா நாடுகளையும்போல மக்களின் இயல்பு வாழ்க்கை இலங்கையிலும் பாதிப்படைந்தது. இதனால் இலங்கையின் பொருளாதாரம் அதிகம் சரிவடைந்தது என்றாலும் கொரோனா தாக்கத்துக்கு முன்பே இலங்கை அரசு கடன் நெருக்கடியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதற்கு முதன்மைக் காரணம் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியதுதான். 2009-ம் ஆண்டு இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் எழுப்பும் திட்டத்துக்காக 85 சதவிகித கடனை சீனா, இலங்கையின் ராஜபக்ஷே அரசுக்கு அளித்தது. அதாவது, 2010-ம் ஆண்டு 306 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை 6.3 சதவிகித வட்டிக்கும், 2011-ம் ஆண்டு 900 மில்லியன் டாலரை 2 சதவிகித வட்டிக்கும் வாங்கியது இலங்கை அரசாங்கம். விளைவு, 2017-ம் ஆண்டுவாக்கில் இலங்கையின் மொத்த பொருளாதாரத்தில் 50 சதவிகிதம் கடனாக மாறியது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுக்கால குத்தகைக்கு சீனாவிடம் தாரைவார்த்தது இலங்கை அரசாங்கம். 2020-ம் ஆண்டில் இலங்கையின் மொத்தப் பொருளாதாரத்தில் 80 சதவிகிதம் கடனாக மாறியது. விளைவு, அம்பாந்தோட்டை துறைமுகத்தைப்போலவே கொழும்புத் துறைமுக நகரமும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு சீனாவிடம் கைமாறியது.

இப்படி சீனாவிடம் வாங்கிய அடைக்க முடியாத கடன் ஒருபுறமிக்க, மற்றொருபுறம் இலங்கை அரசின் நிர்வாகத் தோல்வியும் காரணமாக அமைந்திருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு 7.5 பில்லியன் டாலராக இருந்த அந்நியச் செலாவணி இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுமார் 2.8 பில்லியன் டாலராகக் குறைந்திருக்கிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டு மட்டும் 20 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. இந்த ஆண்டில் மட்டும் 8 சதவிகிதம் என்ற அளவுக்குக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 3.6 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

கடும் பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் வேறு வழியின்றி கூடுதல் விலைகொடுத்து வாங்கினாலும், அரசாங்கம் உணவுப்பொருள் தட்டுப்பாடு நிலவுகிறது, இன்னும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே உணவுப்பொருள்கள் கையிருப்பில் உள்ளன' எனக் கூறி அதிரவைத்தது. மேலும், உணவுப்பொருள்களைப் பதுக்கிவைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,பொருளாதார அவசரநிலைப் பிரகடனத்தை’ அமல்படுத்தினார்.

இப்படி பலத்தரப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவில் இலங்கை அரசு கவிழும் நெருக்கடியும் நிகழ்ந்தது.தான் பதவி விலகுவதாக மகிந்த ராஜபக்சே செய்திகளும் வெளியாகின. நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அவருக்கு பதிலாக பிரதமர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறின. இருப்பினும் இந்த தகவல்களை இலங்கை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பல்வேறு நெருக்கடிகளில் நகர்ந்துக்கொண்டிருக்கும் இலங்கை விரைவில் இதிலிருந்து மீளுமா?அல்லது அம்மக்களின் நிலை என்னவாகுமோ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *