திருநெல்வேலி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். விளையாட்டுக்களில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை வழங்கும் விதமாக உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்து முடிந்த வட்டார விளையாட்டு போட்டிகளில், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கபடியில் முதலிடமும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஹாக்கியில் முதலிடமும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கால்பந்து மற்றும் கூடைப்பந்தில் முதலிடமும் பெற்றுள்ளனர். பல்வேறு தடகளப் போட்டிகளிலும் முதலிடம் பெற்றுள்ளனர். அடுத்த கட்டமாக நடைபெற இருக்கின்ற மாவட்ட விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக பங்குபெறும் வகையில் பயிற்சி வழங்குவதற்காக இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அறிவியல் ஆசிரியர் ஜென்னிக்ஸ் காமராஜ் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் விளையாட்டு உபகரணங்களை பரிசாக வழங்கினர். நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால் மற்றும் சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். விளையாட்டு உபகரணங்களை பெற்றுக் கொண்ட மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற பள்ளியின் தாளாளர் சுதாகர் பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்தினர்.
