உசிலம்பட்டியில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பூரண குணமடைய அவரது குலதெய்வ கோவிலில், ஆறு பங்காளிகள் வகையறாவின் பூசாரிகள், கோடாங்கிகள் மற்றும் உறவினர்கள் சிறப்பு பூஜை செய்து வேண்டிக் கொண்டனர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், அவர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரப்பபடுகின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம் என உறவினர்கள் சில நாட்களுக்கு முன் அறிவித்த நிலையில் அவர் பூரண குணமடைய ரசிகர்களும் அவரால் திரைத்துறைக்கு வந்தவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று இயக்குநர் இமயம் பூரண குணமடைய வேண்டி அவரது குலதெய்வ கோவிலான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொன்னாங்கன் கோவிலில், ஆறு பங்காளிகள் வகையறாவின் கோடாங்கிகள், பூசாரிகள் மற்றும் அவரது அண்ணன் மகன் கமல் தலைமையில் உறவினர்கள் சிறப்பு பூஜை செய்து, பூரண குணமடைய வேண்டிக் கொண்டனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் நேரில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய வரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இந்த ஆண்டும் பூரண குணமடைந்து மாசி திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என தங்கள் குல தெய்வத்திடம் வேண்டிக் கொண்டதாக தெரிவித்தனர்.




