

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் சி.வி.சண்முகம். அதிமுக முன்னாள் அமைச்சர். கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது இவருடைய வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த தாக்குதலில், அதிமுக தொண்டர் முருகானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, சண்முகம் அளித்த புகாரின்படி ரோஷணை போலீசார் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு பின், ராமதாஸ், அன்புமணி ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டு, மற்றவர்கள் மீது விசாரணை நடந்து வந்தது.ராமதாஸ், அன்புமணி ஆகியோர் நீக்கப்பட்டதை எதிர்த்தும், சிபிஐ விசாரிக்க கோரியும் சண்முகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி 2012ம் ஆண்டு முருகானந்தம் கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, சண்முகம் வீட்டிற்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர் வெளியே சென்றால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னும் இந்த பாதுகாப்பு தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 29ம் தேதியில் இருந்து, சண்முகத்திற்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது.முருகானந்தம் கொலை வழக்கு வரும் 19ம் தேதி திண்டிவனம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில், சண்முகத்துக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
