• Sun. Apr 28th, 2024

தமிழ்நாட்டில் ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனம் முதலீடு செய்ய விருப்பம்

Byவிஷா

Feb 1, 2024

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளார். அங்குள்ள ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனமான ஆக்சியோனா தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தண்ணீர் உள்கட்டமைப்பில் இயங்கி வருகிறது.
ஆக்சியோனா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரஃபேல் மதேயு அல்கலா, ஆக்சியோனாவின் நீர்ப் பிரிவின் சி.இ.ஓ மானுவேல் மன்ஜோன் வில்டா ஆகியோரை அழைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஆராய்வதில் புதிய முயற்சிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாட்டில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதித்தார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது..,
ரோக்கா குழுமத்தின் உலகளாவிய இயக்குநர் கார்லோஸ் வெலாஸ்குவேஸ் மற்றும் ரோக்கா இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் கே. நிர்மல் குமார், தமிழகத்தில் ரூ. 400 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்தனர்.
ஆக்சியோனாவின் சி.இ.ஓ ரஃபேல் மதேயு அல்கலா மற்றும் நீர் பிரிவின் சி.இ.ஓ மானுவேல் மன்ஜோன் வில்டா ஆகியோருடன் சாதகமான ஒத்துழைப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது, மின் உற்பத்தி மற்றும் நீர் மேலாண்மையில் தமிழ்நாடு திறமையை வெளிப்படுத்துகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான நமது அர்ப்பணிப்பு உலக கவனத்தைப் பெற்று வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் தி.மு.க ஐ.டி விங் பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் பதிவிட்டிருப்பதாவது: “முதலீட்டாளர்களின் முதல் முகவரி! புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான ஆக்சியோனாவின் முதன்மை செயல் அலுவலர் ரஃபேல் மாடியோ உள்ளிட்டோர், தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி, நீர் சுழற்சி, நீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடினார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவாதத்திற்குப் பிறகு, ஆக்சியோனா இந்தத் துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தது. இந்த சந்திப்பின்போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உடனிருந்தார். மு.க. ஸ்டாலினுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையே இன்னும் சில சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன் பிறகு முதல்வர் பிப்ரவரி 7-ம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *